SKIP TO MAIN CONTENT

சிட்னியில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான இலங்கையர் பிணையில் விடுதலை!

Mohamed Kamer Nilar Nizamdeen.
Mohamed Kamer Nilar Nizamdeen. Source: Facebook

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

பயங்கரவாதக்குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்த இலங்கையை சேர்ந்த கமீர் நிஜாம்டீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் Malcolm Turnbull முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதுடன் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டில் கமீர் நிஜாம்டீன் வைத்திருந்த பழைய நோட் புத்தகத்தை ஆதாரமாகக்கொண்டு அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

25 வயது முகமட் நிஜாம்டீன், இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் எனவும், இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 4 வாரங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட முகமட் நிஜாம்டீன் நீதிமன்றில் முன்னிலையானபோது அவருக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டதுடன் வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப்பின்னணியில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட நோட் புத்தகத்தில் இருக்கும் கையெழுத்து முகமட் நிஜாம்டீனின் கையெழுத்துடன் பொருந்திப்போகவில்லை எனத் தெரிவித்துள்ள நிஜாம்டீனின் சட்டத்தரணி, இவ்வழக்கில் பொலிஸாரின் வாதம் இனிமேல் செல்லுபடியாகாது என்றும் நிஜாம்டீன் குற்றமற்றவர் என நிரூபிக்கும்வரை தாம் தொடர்ந்து போராடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை எந்த முகாந்திரமும் இல்லாமல் கமீர் நிஜாம்டீனை கைது செய்தது மட்டுமல்லாமல், அவருக்கு உரிய சட்ட வசதிகளை மறுத்தும், அவர் தொடர்பான செய்திகள் திரிபுபடுத்திப்பட்டு வெளியிடப்பட்டு வருவதாகவும் கூறி அவரது ஆதரவாளர்கள் பலர் கையெழுத்து வேட்டையொன்றை நடத்தியிருந்ததுடன் இந்த கைது நடவடிக்கைக்கெதிராக இலங்கையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now