SKIP TO MAIN CONTENT

சாய்ந்தமருதில் தொடர்ந்து பதற்றம்! நேற்றிரவு சண்டையில் 6 குழந்தைகள் உட்பட 15 பேர் பலி!!

file photo, Sri Lankan policemen patrol a Muslim neighborhood before Friday prayers in Colombo
File photo, Sri Lankan policemen patrol a Muslim neighborhood before Friday prayers in Colombo Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

சிறிலங்காவின் கிழக்கு மாவட்டமான அம்பாறை - சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் நால்வர் தற்கொலைக்குண்டுதாரிகள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கையின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குடியேற்றத்திட்டம் ஒன்றில் விசேட அதிரடிப்படையினரும் பொலீஸாரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின்போது அங்கு அசம்பாவிதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அப்பிரதேசத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. அப்போது வீடொன்றில் பதுங்கியிருந்தவர்கள் என்று கூறப்படும் இஸ்லாமிய குழு ஒன்றுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பரஸ்பர துப்பாக்கிச்சண்டை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடம்பெற்றதாக அங்கிருந்து நேற்றிரவு கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இன்று காலை படைத்துறை பேச்சாளர் இந்த சம்பவம் குறித்து தகவல் தருகையில் - நேற்றைய இரவு இடம்பெற்ற சம்பவத்தில் பலியான ஒன்பது பேரது சடலங்களை தாங்கள் மீட்டிருப்பதாக கூறியுள்ளார். துப்பாக்கிச்சண்டை ஓய்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடெங்கிலும் நடத்தப்பட்ட விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் நேற்று மாத்திரம் 20 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் இந்த எண்ணிக்கையுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டுவரும் நபர்களின் எண்ணிக்கை 90 என்றும் பாதுகாப்புத்துறை பேச்சாளார் மேலும் தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now