சிட்னி வீதிகளில் கைபேசியைப் பயன்படுத்திக்கொண்டு செல்லும் பாதசாரிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது வீதி பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக NRMA அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக சிட்னி வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளில் மூன்றில் ஒருவர் கைபேசி/earphones பயன்படுத்தியபடி செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக பரபரப்பான CBD - Parramatta வீதிகளில் அவதானிக்கப்பட்ட சுமார் 26 ஆயிரம் பாதசாரிகளில் 8 வீதமானவர்கள் சட்டவிரோதமாக வீதிகளைக் கடந்துசென்ற அதேநேரம் இவர்களில் 3 வீதமானவர்கள் கைபேசியை/earphones பயன்படுத்தியவண்ணம் சென்றிருக்கிறார்கள் என NRMA அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்தவாரம் சிட்னியில் சாலைவிதிகளை மதிக்காமல் ஏனோதானோவென்று கடவைகளைப் பயன்படுத்திய சுமார் 103 பாதசாரிகளுக்கு பொலிஸார் தலா 75 டொலர்கள் அபராதம் விதித்திருந்த பின்னணியில் இவ்வறிக்கை வெளியாகியுள்ளது.
பொலிஸாரின் இந்நடவடிக்கை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் வீதிவிபத்துக்களால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு இவ்வாறான செயற்பாடு அவசியமாவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதசாரிகள் வீதியைக் கடப்பதற்கான சமிக்ஞை விளக்கு ஒளிராமல் வீதியைக் கடந்துசெல்வது சட்டத்திற்குப்புறம்பான செயலாகும்.
அத்துடன் சிட்னியில் வீதிவிபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 171 ஆக காணப்படும் நிலையில் இதில் 26 பேர் பாதசாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
