ICC- சர்வதேச கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கான பதில் விரைவில் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தேர்வுக்குழுவின் தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு ஆஜராகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற பிரிவின் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான பதிலை 14 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை வழக்கறிஞர்கள் தயாரித்து கொண்டிருப்பதாகவும், விரைவில் அது அனுப்பிவைக்கப்படும் என்றும் சனத் ஜயசூரிய ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
சனத் ஜயசூரிய எப்படியான ஊழல் வழக்கில் சிக்கியிருக்கிறார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவராத பின்னணியில், Match-Fixing-ஆட்டநிர்ணய சதி மற்றும் மைதானத்தை தயார் செய்வதில் மோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் தன் மீது இல்லை என்றும், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காதமையே தன் மீதான குற்றச்சாட்டு எனவும் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் 1996 உலகக் கோப்பையின் நாயகனான சனத் ஜயசூர்ய மீதும் ஊழல் புகார் எழுந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
