பணதுக்காக பெற்றோரை படுகொலைசெய்வதற்கு இணையத்தில் கூலிப்படைக்கு பணம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கன்பராவில் பெண்ணொருவர் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மர்ம இணையத்தளமொன்றின் வழியாக இந்தப்பணம் செலுத்தப்பட்டதை பிரித்தானிய ஊடகவியலாளர் துப்பறிந்து ஆஸ்திரேலிய பொலீஸாருக்கு அறிவித்ததை அடுத்து, திங்கட்கிழமை இந்தக்கைது இடம்பெற்றிருப்பதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பேரை படுகொலை செய்வதற்கு இணையத்தில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லண்டனை தளமாகக்கொண்ட ஊடகவியலாளர் ஒருவரின் தகவலை அடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
கன்பராவின் பிரபலமான வர்த்தக தம்பதிகள் என்று அறியப்படுபவர்களின் மகளே இந்தச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்று பொலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப்படுகொலைகளை மேற்கொள்ளவதற்காக இருபதினாயிரம் டொலர்களை வழங்குவதற்கு கூலிப்படையினருடன் இணக்கம் தெரிவிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் ஆறாயிரம் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக பொலீஸ்தரப்பின் பூர்வாங்க விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் செலுத்தப்பட்ட கூலிப்படையினர் என்று கருதப்படுபவர்களின் தகவல்களையும் குறிப்பிட்ட பெண் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார் என்று பொலீஸார் கூறியுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் முன்னைய குற்றப்பின்னணிகள் எதுவுமில்லாதவர் என்றும் தற்கொலைக்கான மன அழுத்த சிக்கல்களுடையவராக அடையாளம் காணப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோரை பணத்துக்காகவே படுகொலைசெய்வதற்காக திட்டமிட்டிருக்கிறார் என்று நம்புவதாகவும் பொலீஸார் கருதுகின்றனர்.
கன்பரா மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட பெண், இந்த மாதம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
