வெளிநாட்டு மாணவர்களை மெல்பேர்ன் மற்றும் சிட்னி பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ள நேரிடலாம் என்று பிரதமர் Scott Morrison, Fairfax Media-வுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.
மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகரங்களின் சனத்தொகை மிகவேகமாக அதிகரித்து வருவதால் அவற்றின் எதிர்கால வசதிகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறுபவர்களை புறநகர்களில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கும் சட்டத்தை ஏற்படுத்துவதற்கு திட்டமிடுவதைப் போலவே, சர்வதேச மாணவர்களும் சிட்னி மெல்பேர்ன் தவிர்ந்த ஏனைய இடங்களில் கல்விகற்கும் வகையில் அரசு மாற்றம் கொண்டுவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சிட்னியின் சனத்தொகை கடந்த வருடம் ஒரு லட்சத்து இரண்டாயிரம் பேரினால் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு அதிகரித்த எண்ணிக்கையில் 85 ஆயிரம்பேர் புதிய குடிவரவாளர்கள்.
மெல்பேர்னின் சனத்தொகை கடந்த வருடம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரினால் அதிகரித்திருக்கிறது. இவர்களில் எண்பதினாயிரம் பேர் புதிய குடிவரவாளர்கள்.
மேற்குறிப்பிட்ட கணக்கெடுப்புகளின்படி, இரண்டு மாநிலங்களினதும் நகர்புறங்களில் அதகரித்துவரும் சனத்தொகை பல்லேறு அபாய சமிக்ஞைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவை குறித்து முற்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள பல்வேறு நகர்வுகளில் ஒன்றாக வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதில் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்படலாம் என்று பிரதமர் Scott Morrison கோடி காட்டியிருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில் - வெளிநாட்டு மாணவர்களை அடிலெய்ட், பேர்த், குயீன்ஸ்லாந்து மற்றும் டஸ்மேனியா பல்கலைக்கழங்களுக்கு சேர்த்துக்கொள்வதில் பிரச்சினை இல்லை என்றும் மெல்பேர்ன் - சிட்னி பல்கலைக்கழங்களில் இணைத்துக்கொள்வது குறித்து கரிசனை கொள்ளவேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.