கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவலடைந்துவரும் காலப்பகுதியில், இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகினால் casual வேலையாட்களுக்கு நோய்க்கால விடுப்பு பணம் (paid sick leave) வழங்கப்படவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை மொறிஸன் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நோயினால் வேலைக்கு சமூகமளிக்காத casual வேலையாட்களுக்கு கொடுக்கப்படுகின்ற உதவித்தொகை (sickness allowance) மாத்திரம் வழங்கப்படும் என்றும் அந்த தொகையை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கும் காலப்பகுதியை நீக்குவதற்கு தயார் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், தொழிற்சங்கங்கள் சந்தர்ப்பம் பார்த்து நாட்டின் அடிப்படை தொழில் விதிகளை மாற்றுவதற்கு முயற்சிசெய்வதாக தொழிற்சங்கங்களை அரசு வன்மை கடிந்திருக்கிறது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, Casual தொழிலாளர்களுக்கான நோய்க்கால விடுப்பு உதவித்தொகை எனப்படுவது குழந்தைகள் இல்லாத தனியாட்களுக்கு 560 டொலர்கள் வரையிலும் இருவருள்ள குடும்பத்திற்கு 1010 டொலர்கள் வரையிலும் வழங்கப்படுகிறது.
இந்தத்தொகையானது குறிப்பிட்ட வேலையாட்கள் நோயினால் வேலைக்கு சமூகமளிக்காத நாட்களின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல. இது வேலைக்கு சமூகமளிக்காது நோய் குறித்த பணியிட பரீசிலனையின் அடிப்படையில் ஒரு தடவை மாத்திரம் (one-off) வழங்கப்படுகின்ற கொடுப்பனவாகும்.
இந்த கொடுப்பனவுக்கு ஒருவாரம் காத்திக்கவேண்டும். அத்துடன், குறிப்பிட்ட வேலையாட்களிடம் 5500 டொலர்களுக்கு அதிகமான நிதி ஆதாரங்கள் (financial assets) இருப்பின், இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்வதற்கு கூடுதலான காலத்துக்கு காத்திருக்கவேண்டும். 18 ஆயிரம் டொலர்களுக்கு அதிகமான நிதி ஆதாரங்களிருப்பின் 13 வாரங்கள்வரை காத்திருக்கவேண்டும்.
இந்தக்காத்திருக்கும் காலப்பகுதியை casual வேலையாட்களுக்கு நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குறிப்பிட்ட casual வேலையாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டிய சூழ்நிலையேற்பட்டால், இவர்களுக்குரிய நோய்விடுப்பு உதவித்தொகையை உடனடியாகவே வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்துள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தப்படுகின்ற casual வேலையாட்களுக்கு நோய்க்கால விடுப்பு வழங்கவேண்டும் என்று சுமார் 33 லட்சம் casual வேலையாட்களின் சார்பில் ஆஸ்திரேலிய தொழிற்சங்கம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியிருந்தது.
லண்டனில் அந்நாட்டு casual வேலையாட்களுக்கு அரசு அந்த சலுகையை வழங்கியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசாங்கம் அந்தக்கோரிக்கையை அடியோடு நிராகரித்திருக்கிறது.
Share
