நூறு வயதைக் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவில் தற்போது நூறு வயதைத்தாண்டிய நாலாயிரத்து 828 வயோதிபர்கள் உள்ளார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை மூவாயிரத்து 623 என்று கணக்கெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, நூறு வயதை பூர்த்தி செய்த வயோதிபர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில்தான் அதிகம் (1463) உள்ளார்கள். அதற்கு அடுத்ததாக விக்டோரிய வயோதிபர்கள் (1432) இடம்பிடித்துள்ளார்கள்.
இவ்வாறு நுறு வயதைத்தாண்டியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிரத்தியேக ஆய்வுகளில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இவ்வாறு நீண்ட ஆயுளுடன் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்நாளில் புகைப்பிடிக்காதவர்கள் அல்லது சிறு வயதிலேயே புகைப்பதை நிறுத்தியவர்கள் என்றும் மிகமுக்கியமாக இந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் திருமணமாகாதவர்கள் என்றும் அறியவந்துள்ளது.
நூறு வயதைத்தாண்டிய இந்த வயோதிபர்களில் அரைவாசிப்பேர் முதியோர் இல்லங்களில் அல்லாது, தங்களது வீடுகளில்தான் வசித்துவருகிறார்கள் என்பது இந்த ஆய்வில் கண்டறிப்பட்ட இன்னொரு விடயமாகும்.
