இப்புதிய மாற்றம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Centrelink பணம் பெறுபவர்கள் தங்களின் வருமானத்தை Centrelinkற்கு தெரிவிக்கும் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட சட்டமுன்வடிவு கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாற்றங்களினால் ஐந்து லட்சத்திற்கு அதிகமான ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Robodebt - சென்ற ஆண்டு Centrelinkல் கணினி மூலமாக தன்னிச்சையாக மீளாய்வு செய்யப்பட்ட போது பலருக்கு கொடுப்பனவு தொகை அதிகமாக கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து அப்பணத்தை மீளக் கட்டும்படி அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. பின்னர் Centrelink செய்த கணக்கீடு தவறானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 10,000 வாடிக்கையாளர்கள் மோரிசன் அரசின் மீது class action வழக்கு தொடுத்தனை தொடர்ந்தே Centrelink கொடுப்பனவு தொகையினை கணக்கிடும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இப்புதிய சட்டத்தின் படி கொடுப்பனவு பெறுபவர்களின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கு பிறகே தங்களின் வருமானம் என்ன என்பதனை Centrelinkற்கு தெரிவிக்க வேண்டும். இப்போது இருப்பது போன்று தங்களுக்கு வருமானம் இவ்வளவு வரும் என கணக்கிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் கொடுப்பனவு பணத்தொகை சரியாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்பதினால் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் 2.1 பில்லியன் டாலர்கள் சேமிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
