அரச கொடுப்பனவு பெறும் வேலையற்றவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கான உதவித்தொகை அடுத்த வாரம் முதல் சிறிதளவு அதிகரிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆண்டுக்கு இரு தடவைகள் மேற்கொண்டுவரும் மீளாய்வின் பின்னரான கொடுப்பனவு அதிகரிப்பின் ஊடாக, நாடு முழுவதுமுள்ள 4.8 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் பயனடையவுள்ளனர்.
அரச கொடுப்பனவை பெற்றுவரும் வேலையற்றவர்களுக்கு தற்போது இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை $545. 80 அரச கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. இந்தக்கொடுப்பனவு நான்கு டொலர்களால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேபோல, ஓய்வூதியம் பெறும் தனிநபர்கள் தற்போது இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை $ 826.20 பெற்றுவருகிறார்கள். இவர்களுக்கான கொடுப்பனவு 8.70 டொலர்களால் அதிகரிக்கவுள்ளது.ஓய்வூதியம் பெறும் தம்பதியினரின் கொடுப்பனவு 13.20 டொலர்களால் அதிகரிக்கவுள்ளது.
குழந்தைகளை பராமரிப்பதற்காக பெற்றோர்களுக்கு வழங்கப்படும் இருவாரக்கொடுப்பனவு ஆறு டொலர்களால் அதிகரிக்கவுள்ளது.
