SKIP TO MAIN CONTENT

‘நன்னடத்தை சோதனை அடிப்படையில் நாடுகடத்தும் சட்டம் அகதிகளுக்கு பொருந்தாது’

Villawood Immigration Detention Centre. A man has attempted self harm at the facility.
Villawood Immigration Detention Centre is one of three facilities used to house people who have had their visas cancelled. Source: SBS News

2 min read

Published

Updated


Skip to article content

Character test-நன்னடத்தை சோதனையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரித்து அவர்களை நாடுகடத்துவதற்கு ஏதுவான சட்டமானது அகதிகளுக்கு பொருத்தமற்றது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதையடுத்து, இந்த விவகாரம் உள்துறை அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதன் மூலம் அகதிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் அரசு பின்பற்றிவந்த மிகப்பெரியதொரு நடைமுறை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படும்போது - அகதிகள் உட்பட ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லாதவர்கள் பாரதூரமான குற்றங்களில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டாலோ, குறைந்தது 12 மாத சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டாலோ, ஆஸ்திரேலிய குடிவரவு சட்டத்தின் s501 என்ற நன்னடத்தை பிரிவின் கீழ் சோதனை (character test) செய்து, அவர்களது விசாவை நிராகரித்து சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பவோ, திருப்பி அனுப்புவதற்கான நாடு பொருத்தமில்லை என்று கருதுமிடத்தில் காலவரையறையற்ற வகையில் தடுப்புமுகாமில் வைத்திருப்பதற்கோ தற்போது உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது.

இப்படியானவர்கள் சிட்னி விலவூட் தடுப்புமுகாம் உட்பட ஏனைய மூன்று முகாம்களில் தடுத்துவைக்கப்படுவது வழக்கமாகும்.

ஆனால், கடந்த டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தமிழ் அகதி ஒருவர் தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஆஸ்திரேலியாவின் குடிவரவு சட்டத்தின் s501 நன்னடத்தை பிரிவானது அகதிகளுக்கு பொருத்தமற்றது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சம் கோரி வந்த ஒருவர் உண்மையில் அகதிதானா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசீலனைகளை மேற்கொண்டு, அவரை அகதி என்று உறுதிப்படுத்திய பின்னர், s501 என்ற நன்னடத்தை சட்டப்பிரிவின் கீழ் மீண்டும் அவரை சோதனைக்கு உட்படுத்துவது பொருத்தமற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பில் கடந்த மாதம் தமிழ் அகதியின் வழக்கை முன்னெடுத்த வழக்கறிஞர் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதேபோன்ற, வழக்குடன் தடுப்பில் உள்ள மேலும் 14 பேரது வழக்குகளை மீள்பரிசீலனை செய்யுமாறும் கோரியுள்ளார்.

கடந்த வருடம் - 2019 ஆம் ஆண்டு மாத்திரம் - நன்னடத்தை சட்டப்பிரிவின் கீழ் 943 பேரின் விசாக்கள் குடிவரவு அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை சுமார் 600 பேர் நன்னடத்தை சட்டத்தின் கீழ் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்று குடிவரவு அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now