கடந்த பத்து வருடங்களில், குழந்தைத் திருமணம் 15 சதவிகிதத்தால் குறைந்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் - யுனிசெஃப் (UNICEF) கூறுகிறது. அதில், இந்தியப் பெண்கள் (குறிப்பாக சிறுவர்கள், குழந்தைகள்) வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கப்படுவது குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

எண்ணிக்கை அடிப்படையில், அந்த வீழ்ச்சி 15 சதவீதமாகும். முன்னர் நான்கில் ஒரு பெண் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது. தற்போது அது ஐந்தில் ஒரு பெண் குழந்தையாக குறைந்துள்ளது.
இந்த அடிப்படையில் கணக்குப் பார்த்தால், 2030ம் ஆண்டுக்குள் 150 மில்லியன் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று யுனிசெஃப் தெரிவிக்கிறது.
கடந்த பத்து வருடங்களில் குழந்தைத் திருமணத்தின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவை தெற்காசியா கண்டுள்ளது. 18 வயதாகும் முன்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டி கட்டாயப்படுத்தப்பட்ட பெண்களின் சதவிகிதம் 50 இலிருந்து 30 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாரிய விழிப்புணர்வு தான்.
இந்தியாவில், சட்டபூர்வமாகத் திருமணம் செய்து கொள்ள, பெண்ணின் வயது 18 ஆகும். ஆனால் மில்லியன் கணக்கான குழந்தைகள், குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்கள் அதற்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.
பல பெற்றோர்கள், தங்களது நிதிநிலமையைப் பாதுகாக்கவும் அதை மேம்படுத்தவும் தங்கள் குழந்தைகளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
அரசு எடுக்கும் முயற்சிகள், கல்வி, மற்றும் வலுவான விழிப்புணர்வுத் திட்டங்களால் இந்த மாற்றம் வந்திருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் பிரதான பாலின ஆலோசகர் அஞ்சு மல்ஹோத்ரா சொல்கிறார். "ஒரு பெண் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டால், அவர் உடனடியாக மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் அதன் விளைவுகளைச் சந்திக்கிறார்" என்று கூறும் அவர், "பாடசாலை கல்வியை அவர்களால் முடிக்க முடியாது, அவரது கணவரால் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன, மற்றும் சமூக விளைவுகளையும் வறுமையின் சுழற்சிகளையும் எதிர்நோக்கும் ஆபத்தும் அதிகரிக்கின்றன" என்கிறார்.

யுனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய தரவின்படி, குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து வைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை இப்போது 12 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும், குழந்தைகளாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட 650 மில்லியன் பெண்கள் தற்போது உலகில் வாழ்ந்து வருகின்றனர்.
