தாங்கள் நடத்துகின்ற குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் கூடுதலான குழந்தைகளை பராமரிப்பதாக போலிக்கணக்கு காண்பித்து குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கான அரசு மானியத்தில் மோசடி செய்த மெல்பேர்னை சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு நிலைய நடத்துனர்கள் பலர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
மெல்பேர்ன் Thomastown-இல் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தை நடத்துகின்ற தம்பதியர் இவ்வாறு ஒன்றரை கோடி அரசு மானியத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளதையடுத்து, அவர்கள் பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களைத்தவிர மெல்பேர்னில் வேறு பல இடங்களில் இவ்வாறு அரசு மானியத்தில் மோசடி செய்த நால்வரும் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கான அரசு மானியத்தில் மோசடி செய்த விவகாரம் தொடர்பில் 70 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இக்கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், கோவிட் காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இடர்கால நிதியிலும் மோசடிகள் மேற்கொண்டிருக்கிறார்களா என்பது குறித்த விசாரணைகளை நடத்திவருவதாக பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மெல்பேர்ன் மஜிஸ்ரேட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான வழக்கு 2021 ஜூன் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
