ஆஸ்திரேலியாவுக்கு அருகில் சீனா தனது இராணுவ தளத்தை அமைப்பது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டுவருவதாக Fairfax ஊடகம் தெரிவித்துள்ளது.
தென் பசுபிக் பிராந்தியத்தில் தனது முதலாவது இராணுவ தளத்தை Vanuatu தீவில் அமைப்பதற்கான இந்த முயற்சிகளில் சீனா ஈடுபட்டுவருவதாகவும், இது ஆஸ்திரேலியாவிலிருந்து 2000 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமையவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த நாடுகடந்த இராணுவ பிரசன்னம் தொடர்பாக, ஆஸ்திரேலியா - அமெரிக்க உயர் மட்ட தரப்புக்கள் அண்மையில் கன்பராவிலும் வோஷங்டனிலும் சந்தித்து பேச்சுநடத்திய அதேநேரம், பிராந்திய பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டுள்ள ஆஸ்திரேலிய - நியூசிலாந்து புலனாய்வுத்துறையினர் சீனாவின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் Vanuatu தீவில் பெருந்தொகை பணத்தை கொட்டி அபிவிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீனா, அந்நாட்டு பிரதமரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தைக்கூட நிர்மாணித்துக்கொடுத்திருப்பதுடன், Vanuatu தீவின் முக்கிய துறைமுகங்களை தனது கடற்படை கப்பல்கள் தரித்து செல்லும் முக்கிய தளங்களாக பயன்படுத்துவதே தற்போதைக்கு சீனாவின் நோக்கமாக உள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vanuatu தீவு பசுபிக் சமூத்திரத்தின் தென் பிராந்தியத்திலுள்ள பிரசித்திபெற்ற சுற்றுலா மையமாகும். இதன் சனத்தொகை அண்ணளவாக 2 லட்சத்து 70 ஆயிரம்.