நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயதான Brenton Tarrant, 2019 மார்ச் மாதத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 51 பேர் கொல்லப்பட்டனர்.
குறித்த நபருக்கு தண்டனை வழங்கும் நீதிமன்ற அமர்வு கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி Brenton Tarrant சிறப்பு அனுமதியில் வெளியில் வரமுடியாதவாறு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் தண்டனைக்காலம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும் நீதிபதி Cameron Mander அறிவித்தார்.
நியூசிலாந்தில் இவ்வாறு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறை என குறிப்பிடப்படுகிறது.
Brenton Tarrant மீது 51 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிகள், பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணை இடம்பெற்றிருந்தது.
சுமார் 4 நாட்கள் இடம்பெற்ற நீதிமன்ற அமர்வுகளில், குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் நேரடியாகவும் காணொளி வழியாகவும் பங்கேற்றனர்.
மேலும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலிலிருந்து உயிர்தப்பியவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட பலர் வாக்குமூலம் அளித்தனர்.
இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அந்நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
