தனது Facebook பக்கத்தில் அவரது பெயருக்குக் கீழே அவர் எழுதியிருந்த வாசகம், “இலக்கில் தெளிவு”. தான் எதை அடைய வேண்டும் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார். அதனை எப்படி அடைய வேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார் என்பது அவரது செய்கைகள் அனைத்திலும் தெரிந்திருந்தது.
இலங்கை வடக்கின் அரியாலை என்ற இடத்தில் பிறந்த இவர், சுதுமலை மானிப்பாய் என்ற இடத்தில் அண்மைக் காலங்களில் வாழ்ந்து வந்தவர். அவர் சிறுவனாக, யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்தார்.
பல வீதி நாடகங்கள் மற்றும் மேடை நாடகங்களைத் தயாரித்து வழங்கிய இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்துத் திரைப்படங்களுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். 1986ஆம் ஆண்டு “தாயகமே தாகம்”, “மரணம் வாழ்வின் முடிவல்ல” போன்ற படங்களை இயக்கியுள்ளார். இலங்கையில் விடுதலைப் போராட்டம் வலுப் பெற்றிருந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் என்ற காட்சியூடகத்தின் மூலம் சினிமா முயற்சிகளைத் தொடங்கி, “அம்மா நலமா” மற்றும் “கடலோரக் காற்று” என்ற இரண்டு படங்களையும் பல குறும் படங்களையும் உருவாக்கியவர். “பிஞ்சு மனம்”, “திசைகள் வெளிக்கும்” என்ற படைப்புகளும் குறிப்பிடத்தக்கன. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் “அப்பா வருவார்” என்ற குறும் படத்தை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
பல்வேறு கலைஞர்களுடன் இணைந்தும் செயற்பட்டிருக்கிறார். குறிப்பாக தமிழக இயக்குநர் மகேந்திரன், சிங்கள இயக்குநர் பிரஸன்ன விதானகே போன்றவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டிருக்கிறார். பாரதிராஜா, சீமான், தங்கர் பச்சான் போன்ற தமிழக சினிமா பிரபலங்களோடு நெருக்கமாகப் பழகியிருக்கிறார்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், போருக்குப் பின்னரான சூழலில் மக்களின் வாழ்க்கையை இயல்பாகப் படம் பிடித்து அவர்கள் கதைகளை உலகறியச் செய்தவர். குறிப்பாக “பனைமரக்காடு” என்ற பெயரில் அவர் இயக்கி வெளியிட்ட திரைப்படம் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து SBS தமிழ் ஒலிபரப்பில் ஒரு நேர்காணல் வழங்கியிருந்தார். பல நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் அவரது Facebook பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், “இலக்கில் தெளிவு” இருந்தமையால் அந்த சிக்கல்களை சவால்களாக எடுத்து, எதிர்கொண்டு வெற்றியும் கண்டிருக்கிறார்.
நோய் கொடிது. அதிலும் புற்றுநோய் மிகக் கொடியது. சுவாசப் புற்றுநோய் வந்து அவதிப்பட்டிருந்தாலும், இறுதியில் மாரடைப்பால் அவர் மரணமடைந்துள்ளார்.