ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர்களாக உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுகின்ற உத்தியோகபூர்வ நிகழ்வுகள், கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்வுகளை இணையவழி நடத்த அரசு தீர்மானித்துள்ளது.
ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், ஆறு மாதங்களுக்குள் உள்ளூர் கவுன்ஸிலொன்றில் நடத்தப்படுகின்ற குடியுரிமை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு குறிப்பிட்ட விண்ணப்பதாரி நாட்டின் குடிமகனாக உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது தற்போது நடைமுறையில் உள்ள ஏற்பாடாகும்.
எனினும் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கென அறிவிக்கப்பட்டுள்ள சட்டங்களின்படி இந்நிகழ்வுகளை நடத்த முடியாதிருந்தமையால் இந்த வருடம் ஆஸ்திரேலிய குடியுரிமையை முழுமையாக பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை தேக்கமடையும் என தெரிவிக்கப்பட்டதுடன் இதற்கான மாற்று ஏற்பாட்டினை அரசு முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் சுமார் 85 ஆயிரம் பேர் உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுகின்ற நிகழ்வுக்கு காத்திருக்கும் பின்னணியில் இது இணையவழி காணொளியூடாகவும் இணையவசதி அற்றவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் ஊடாகவும் மேற்கொள்ளப்படவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வுக்காக காத்துக்கொண்டிருப்பவர்களை உள்துறை அமைச்சு தொடர்புகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் இப்புதிய ஏற்பாடு ஊடாக நாளொன்றுக்கு 750 பேர் உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் - 2018-19 - காலப்பகுதியில் 127 674 பேர் ஆஸ்திரேலிய குடிமக்களாக - சராசரியாக வாரத்துக்கு 2500 பேர் - உறுதிப்பிரமாணம் செய்துகொண்டார்கள். கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
