ஆஸ்திரேலிய குடியுரிமைக்காக விண்ணப்பித்த சுமார் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தமது கைவசம் இருப்பதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு, இவையனைத்தும் பரிசீலனைக்குட்படுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 30 வரை கிடைக்கப்பெற்றவை என குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில் குடியுரிமைக்காக விண்ணப்பித்த ஒருவர் அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 12 மாதங்களிலிருந்து 16 மாதங்களாக தற்போது அதிகரித்துள்ளது.
இதனை நியாயப்படுத்தியுள்ள உள்துறை அமைச்சு, குடியுரிமை கோரி அதிகளவானோர் விண்ணப்பிப்பதாலும் கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் இவை பரிசீலிக்கப்படுவதாலும் ஒருவர் குடியுரிமை பெறுவதற்கு காத்திருக்கும் காலம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
இதேவேளை குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதிலும் தாம் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக உள்துறை அமைச்சின் அதிகாரி Luke Mansfield செனற் விசாரணைக்குழு முன்னிலையில் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஜுலை 2016-உடன் ஒப்பிடும் போது 16 வீதம் அதிகளவான அதிகாரிகள் குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக Luke Mansfield குறிப்பிட்டார்.
Share
