சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமானநிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
மேற்படி வருகையாளர்களுக்ககு ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் விமானநிலையத்தை திறக்கப்போவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் அது செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதால், இந்த திகதியை மேலும் ஒத்திவைப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு சிறப்பு செயலணி இலங்கை அமைச்சரவைக்கு வழங்கும் ஆலோசனையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் அந்தந்த நாட்டவர்களை கொண்டுபோய் சேர்த்துவிடுகின்ற நடவடிக்கையில் விமான நிறுவனங்கள் தொடர்ந்தும் சேவையை வழங்கிவருகின்றன.
Shanghai, Male, New Zealand, Milan, Sydney, Frankfurt, Tokyo, London ஆகிய இடங்களுக்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் தனது சேவைகள நடத்திவருகிறது.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதிப்பொருட்களை குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டுசென்று சேர்ப்பதன் மூலம் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தினை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் சரக்கு விமான சேவையாகவும் பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதைவிட Qatar Airways, Emirates, Etihad, Turkish Airlines உள்ளிட்ட வெளிநாட்டு விமானசேவைகள் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை சொந்தநாட்டுக்கு கொண்டுபோய் சேர்க்கின்ற சேவையை வழங்கிவருகின்றன. இதுகுறித்த நடவடிக்கைகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
