கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலிய சனத்தொகை மற்றும் குடிவரவாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
கொரோனா தொற்று ஏற்பட்டபின்னர், ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறிய தற்காலிக விசா உடையவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களினால், நாட்டின் பொருளாதாரம் பல்வேறு உபவிளைவுகளை சந்திக்கவுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வருடம் ஏப்ரல் - மே மாதங்களில் வெளிநாட்டு மாணவர்களின் வருகை 83 290 என்ற எண்ணிக்கையிலிருந்தபோதும் 2020 இல் அதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை வெறும் 70 என்றும் கூடவே 15 370 வெளிநாட்டு மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்தகுதியுடைய நிரந்தர விசாவுடையவர்களின் வருகை கடந்த வருடம் ஏப்ரல் - மே மாத காலப்பகுதியில் 131 310 என்ற எண்ணிக்கையிலிருந்து இந்த வருடம் 23 240 என்ற இலக்கத்துக்கு படு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பகுதி பகுதியான குடிவரவு - குடியல்வு வீழ்ச்சியானது, நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல், தேசிய தொழிலாளர் வளத்தில் - குறிப்பாக இளையவர்களின் பங்களிப்பில் - மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
