ஆஸ்திரேலிய அகதி முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடு முழுவதும் பரவிவருகின்ற கொரோனா வைரஸினால் கூடுதல் பீதிக்குள்ளாகியுள்ளார்கள்.
தொற்றுநோயிலிருந்து ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளாக அரசு அறிவித்திருக்கும் படிமுறைகள் எதுவும் அகதிகள் முகாமில் சாத்தியமில்லை என்றும் முகாம்களில் வழங்கப்படுகின்ற வசதிகள் எதுவும் நோய்க்கால தயார் நிலைக்கு போதுமானது அல்ல என்றும் முகாம்களிலிருந்து பேசியவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அண்மையில் பிறிஸ்பனில் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் SERCO நிறுவன உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தடுப்பு முகாம்களிலுள்ள அகதிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று அகதிகள் நல அமைப்புக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றன.
இதேவேளை சிட்னி விலவூட் அகதிகள் முகாமில் சுமார் நானூறு பேர் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் அறிவித்துள்ளபடி இப்படியான முகாமில் சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் சாத்தியமில்லை என்றும் உணவு பரிமாறப்படும் இடத்துக்கு கூட்டமாக போகும்போது ஏனையவர்களுடன் இடைவெளியை பேணுவது கடினம் என்றும் இங்குள்ள அகதிகள் தெரிவித்துள்ளார்கள்.
அகதிகள் முகாமில் சுத்தத்தை பேணுவதற்கு போதுமான சோப், கிருமி நீக்கம் செய்வதற்கு உகந்த திரவங்கள் தரப்படுவதில்லை என்றும் இவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
முகாம்களில் மாத்திரமல்லாமல், மெல்பேர்னில் ஹோட்டல் ஒன்றிலும் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களும் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சமும் கவலையும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சு அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் தமது அமைப்பு மிகவும் அவதானத்துடன் செயற்பட்டுவருவதாக தெரிவித்துள்ளது.
Share
