SKIP TO MAIN CONTENT

கொரோனாவினால் தடைப்பட்டுள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கும் நிகழ்வுகள்!

Corona virus and citizenship certificate
Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர்களாக உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுகின்ற உத்தியோகபூர்வ நிகழ்வுகள், கொரோனா வைரஸ்  காரணமாக நாடுமுழுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், இந்த வருடம் ஆஸ்திரேலிய குடியுரிமையை முழுமையாக பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை தேக்கமடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடியுரிமை வழங்குவதில் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் இழுத்தடித்துவருவதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களின் பின்னணியில் தற்போது எழுந்துள்ள கொரோனா தொற்று, குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு மேலும் சோதனைக்காலமாக அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், ஆறு மாதங்களுக்குள் உள்ளூர் கவுன்ஸிலொன்றில் நடத்தப்படுகின்ற குடியுரிமை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு குறிப்பிட்ட விண்ணப்பதாரி நாட்டின் குடிமகனாக உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது தற்போது நடைமுறையில் உள்ள ஏற்பாடாகும். இந்த ஏற்பாடு தற்போது கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் - 2018-19 - காலப்பகுதியில் 127 674 பேர் ஆஸ்திரேலிய குடிமக்களாக - சராசரியாக வாரத்துக்கு 2500 பேர் - உறுதிப்பிரமாணம் செய்துகொண்டார்கள். கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெறாவிட்டாலும் அரசின் சேவைகள் அனைத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதுடன் தேர்தல்களில் வாக்களிக்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நெருக்கடியான இக்காலகட்டத்தில் குடியுரிமை வழங்கும் நிகழ்வுக்குப்பதிலாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now