விக்டோரியாவில் கொரோனா பேரிடரால் தங்கள் வருமானத்தை இழந்து, எந்த உதவிகளையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலுள்ள தற்காலிக விசாவிலுள்ளவர்கள் மற்றும் அகதிகளுக்கான பேரிடர்கால உதவியை விக்டோரிய அரசு எண்ணூறு டொலர்களாக(one-off payment-ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் கொடுப்பனவு) அதிகரித்துள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட 400 டொலர் உதவியை பெற்றுக்கொண்டவர்களும் தங்களது நிலைமை முன்னரிலிருந்து மாற்றமடையவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் மேலதிகமாக 400 டொலர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் இந்த 800 டொலர் உதவித்தொகையின் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் அதிக நன்மையடையலாம் என்று அகதிகள் நல அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா பேரிடரினால் தொழில் இழந்து வழக்கமான வருமானங்களை இழந்து சமூக உதவிகளையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலுள்ள தற்காலிக விசாவிலுள்ளவர்கள், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரினதும் விவரத்தை பெற்று விக்டோரிய அரசிடம் வழங்கி இந்த உதவியை பெற்றுக்கொடுக்கும் ஏற்பாட்டினை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்றிருக்கிறது.
இவ்வாறு 800 டொலர் உதவித்தொகையை பெறுபவர்களது வாழ்க்கைநிலை முன்னேற்றமடையவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் எட்டு வாரங்களின் பின்னர் மற்றுமொரு 800 டொலர் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதிபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரிய அரசின் கொரோனா கால பேரிடர் உதவித்திட்டத்தின்கீழ் ஏற்கனவே 8000 பேர் பயனடைந்திருந்தார்கள்.
இதேவேளை ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 1.1 மில்லியன் பேர் தற்காலிக விசாவுடன் வசித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
