தலைநகர் கன்பராவில் கொரேனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் உறுதிசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நபருக்கு திடீரென்று கொரோனா அறிகுறிகள் தோன்றியதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அங்கு இவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதிலிருந்து பாதிக்கப்படாத ஒரே மாநிலமாக காணப்பட்ட ACT-யில் இன்று தொற்றுக்குள்ளான முதலாவது நபர் இனங்காணப்பட்டதிலிருந்து இனி அங்கு மேலும் பலர் பாதிக்கப்படலாம் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் கடந்த 14 நாட்களாக ஆஸ்திரேலியாவிலேயே இருந்ததாகவும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே அவர் வெளிநாடு சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ள சுகாதார துறையினர், இந்நபருக்கு ஆஸ்திரேலியாவிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வேண்டுமென கூறியுள்ளனர்.
அதேவேளை இந்நபர் வெளிமாநிலத்திற்கு சென்றுதிரும்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கன்பராவில் இதுவரை சுமார் 441 பேருக்கு கொரோனா தொற்றுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் மேலதிக தொற்றுக்கள் ஏற்படாதவண்ணம் மருத்துவ ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Share
