கொரோனா அச்சத்தில் அதிக மருந்துகளை வாங்கிக் குவிப்பது தேவையா?

Medicine

Pills Source: Getty Images/ Nenovo

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசின் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. அதன் பரவலைத் தடுப்பதற்காக நடுவணரசும் மாநில அரசுகளும் பல வழிகளைக் கையாண்டும், பலதரப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தும் முயற்சி செய்து வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமானால் பொது மக்களும் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து ஒத்துழைப்பைத் தருவது மிக மிக முக்கியமானதாகும்.

சென்ற சில வாரங்களாக பொது மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கிச் சேமித்து வைக்கும் போக்கைப் பார்க்க முடிகிறது. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இந்த அதீதப் போக்கைப் படம் பிடித்துக்காட்டி வருகின்றன. நமது பிரதமர் ஸ்காட் மோரிசனும் தன்னுடைய உரையில் இந்த ஆதீதப் போக்கை கண்டித்து, அதை நிறுத்தும்படி அழுத்தமாகப் பேசியுள்ளார். இதற்கெல்லாம் மக்கள் மனதில் கொரோனா தொற்று பற்றியும் அதன் பின்விளவுகள் பற்றியும் எழுந்துள்ள பீதியே காரணமாக உள்ளது. சாப்பிடுவதற்குத் தேவையான பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ, எப்படி சாப்பிடப் போகிறோம், எப்படி மற்ற தேவைகளுக்கான பொருட்களை வாங்கப்போகிறோம் என்ற கவலையே அதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இதே காரணங்களுக்காக பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளையும் தேவைக்கு அதிகமாக வாங்கி சேமிக்கிறார்கள் என்று அரசுக்குத் தெரிய வந்துள்ளது.
A pharmacist reaches for medicine at a shop in Coburg, Melbourne.
Health authorities are preparing for simultaneous surges in COVID-19 and flu cases in winter. Source: AAP
அரசின் கவனத்திற்கு இந்த விவரங்கள் எப்படி தெரியவந்தது?

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் உற்பத்தி, மருந்துகள் விற்பதற்கான அனுமதி, மருந்துகளின் வினியோகம், ஏற்றுமதி இறுக்குமதி போன்ற மருந்து சம்மந்தப்பட்ட பெரும்பாலான செயல்கள் நடுவணரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் TGA என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற Therapeutic Goods Administration-ஆல் கட்டுப்படுத்தப் படுகின்றன.  

கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் மருந்துகள் கிடைக்காமல்  போய்விடுமோ என்ற பயத்தில் பொதுமக்கள்  தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்குவதால்  சில பார்மசிகள் (Pharmacies) அளவுக்கு அதிகமாக அந்த மருந்துகளை மொத்த வியாபாரிகளிடமிருந்து வேண்டிப் பெற்று வருவதால் வழக்கத்துக்கு மாறாக சில மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது TGA-க்குத் தெரியவந்துள்ளது.  

இந்தத் தட்டுப்பாடு TGA-வின் கவனத்திற்கு எப்படி வந்தது?

பார்மசிக்களும் மருந்து மொத்த விற்பனை செய்பவர்களும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு வரும்போது சட்டப்படி TGA-க்குத் தெரிவிக்கவேண்டும். அந்த விதத்தில் சில மருந்துகளின் தட்டுப்பாடு TGA-வின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்தத் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்ன?

இதற்கு முக்கியக் காரணம் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி சேமித்ததுதான் காரணமாக இருந்தது.

இந்த நிலைமை ஏன் உண்மையான தட்டுப்பாடாக இருக்கக்கூடாது?

ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டு விற்கப்படுகின்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்தாலோ அல்லது தட்டுப்பாடு வருவதுபோன்ற சூழல் இருப்பதாகத் தோன்றினாலோ அந்த மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் சட்டப்படி TGA-க்கு முன் கூட்டியே அறிவிக்கவேண்டும். அப்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வார இறுதி வரை தயாரிப்பாளர்களிடமிருந்து எந்த அறிவிப்பும் TGA-க்கு வரவில்லை. அதனால் இந்தத் தட்டுப்பாடு பொதுமக்கள் அளவுக்கதிகமாக வாங்கிச் சேமித்ததால்  ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. 
Therapeutic Goods Administration
Source: SBS
ஆஸ்திரேலியாவில் மருந்துத் தட்டுப்பாடு பற்றிய நிலைமையை TGA எப்படி கண்காணிக்கிறது?

National Medicines Shortages Working Group – என்ற குழுவை TGA ஒழுங்கு செய்துள்ளது.  அதில் TGA- அதிகாரிகளுடன் மருந்து தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், மருத்துவர்கள், பார்மசிஸ்டுகள் போன்றவர்கள் அங்கத்தினராக உள்ள சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். இதுபோன்ற சமயங்களில் அந்தக் குழு அடிக்கடி சந்தித்து மருந்துகளுக்கு தட்டுப்பாடு வரும் சாத்தியம் உள்ளதா, சாத்தியம் இருந்தால் அந்த நிலைமையை எப்படி சமாளிப்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து தீர்வுக்கான முடிவுகளை எடுத்துச் செயல்படும்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரித்து ஆஸ்திரேலியாவில் வினியோகிக்கின்ற மருந்துகளுக்குத் தட்டுப்பாடு வரும் நிலை ஏற்படலாம் என்பதை TGA-க்குத் தெரிவிக்கிறார்கள். அது எப்படிப் பொது மக்களுக்குத் தெரியும்?

தயாரிப்பாளர்கள் TGA-வுக்குத் தெரிவிக்கின்ற இந்தத் தகவலை அவர்கள் https://tga.gov.au  - என்ற TGAவின் இணையதளத்தில் பதிவேற்றுவார்கள்.  அந்த இணையதளத்தில் Medicine Shortages Information Initiative என்று தேடினால் விவரங்கள் கிடைக்கும். தட்டுப்பாட்டில் உள்ள மருந்து அல்லது தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ள  மருந்தின் பெயர், அந்த மருந்திற்கான பதிவு எண், அது மீண்டும் எப்பொழுது கிடைக்க ஆரம்பிக்கும் என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.

இந்த விஷயத்தில் TGAவின் நிலைப்பாடு என்ன?

“பொதுமக்கள் தங்கள் தேவைக்கு மேலாக மருந்துகளை வாங்கிச் சேமிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறது. அப்படிச் செய்வதால், அந்த மருந்துகள் அவசியமாகத் தேவைப்படும் நோயாளிக்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கிறது.”

அந்தக் கோணத்தில் நாம்  யோசித்துப் பார்த்தோமேயானால், ஒரு மருந்து நம் வீட்டு அலமாரியில் உறங்கிக்கொண்டிருக்கும், அதே மருந்து அத்தியாவசியாமாகத் தேவைப்படும் தூரத்திலுள்ள ஒருவருக்கோ அல்லது ஒரு குழந்தைக்கோ கிடைகாததால் அவர்கள் பேரிடரைச் சந்திக்க நாம் காரணமாகி விடுவோம்.  அவர்கள் நம் உறவினராகவோ, நண்பராகவோ கூட இருக்க வாய்ப்பு உண்டு. சில உயிர் காக்கும் மருந்துகள் இருதய நோய், ஆஸ்துமா, குழந்தைகளின் காய்ச்சலுக்குப் பயன்படும் மருந்துகள் தேவையான போது அவர்களுக்குக் கிடைக்காமல் சிலர் உயிரிழக்கவும் நாம் காரணமாகிறோம்.  இதையெல்லாம் மருந்துகளை வாங்கி நம் வீட்டில் அடுக்கி வைத்துக்கொள்ளும் முன் யோசித்துப் பார்க்கவேண்டும்.

a Ventolin inhaler
Source: AAP


இதற்கு உதாரணமாக ஏதாவது கூற முடியுமா?

உதாரணமாக, GTN  என்ற Glyceryl Trinitrate என்ற மருந்து மாரடைப்பு வரும் நேரத்தில் அந்த நோயாளி உயிர் பிழைக்க உதவும் மருந்து. இந்த மருந்தை மருத்துவரின் சீட்டு இல்லாமல் பார்மசிஸ்ட்டிமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.  மற்றொரு உதாரணமாக, ஆஸ்துமாவுக்குப் பயன்படும் Salbutamol  puff . இது Ventolin, Asmol, Airomir போன்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றைத் தேவைக்கு அதிகமாக வாங்கி நாம் வைத்துக்கொண்டால், அது உண்மையில் தேவைப்படும் நோயாளிக்கு உரிய நேரத்தில் கிடைக்காமல் அவர்கள் பல பாதிப்புகளைச் சந்திக்க நேரலாம், சில சமயங்களில் உயிரிழக்கவும் நேரிடலாம். அதற்கெல்லாம் நாம் காரணமாக இருக்கவேண்டுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற உபாதைகளுக்குப் பயன்படும் மருந்துகளையும் இந்த வகையில் சேர்க்கலாம். அதுபோன்ற அத்தியாவசியமான மருந்துகள் பல உள்ளன.  இந்த அபாயங்ளைத் தவிர்ப்பதற்காகவே தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி வைக்காதீர்கள் என்று TGA கேட்டுக்கொள்கிறது.

பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி சேமிப்பதை தடுக்க TGA நடவடிக்கை எடுக்க முடியுமா?

சில மருந்து வகைகளுக்கு நிச்சயமாக எடுக்க முடியும்.

தற்போது என்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றது?

தற்போது பார்மஸிகளில் இருந்து பெறக்கூடிய மருந்துகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  • மருத்துவர் சீட்டு இருந்தால் மட்டும் பெறக் கூடிய மருந்துகளை ஒரு நோயாளியின் ஒரு மாத தேவைக்கு மட்டுமே பார்மசிகள் வழங்கமுடியும். 
  • பார்மசிஸ்டுகள் மூலமாக வாங்கக் கூடிய மருந்துகளை ஒரு நோயாளிக்கு ஒரு unit (pack, bottle, box) மட்டுமே கொடுக்க முடியும்.
  • மேலே கூறியவை மட்டுமின்றி பார்மசிகளில் நாமாகத் தேர்வு செய்து வாங்கிக்கொள்ளும் சில மருந்துகளுக்கும் TGA கட்டுப்பாடு விதித்துள்ளது. உதாரணமாக, முன்பு நாம் பார்மசியில் நுழைந்து  தேர்வு செய்துகொள்ளும் குழந்தைகளின் காய்சலுக்கு பயன்படும் பாராசிட்டமால் போன்ற மருந்துகள் இப்போது பார்மசிஸ்டின் அனுமதி இல்லாமல் வாங்க இயலாது.
இப்படி பல கட்டுப்பாடுகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Uma funcionária da farmácia Manly Vale, em Sydney, usa um "escudo facial" enquanto atende aos clientes.
Uma funcionária da farmácia Manly Vale, em Sydney, usa um "escudo facial" enquanto atende os clientes. Source: Supplied


கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட மருந்துகள் எவையெவை என்ற நாம் அறிந்துகொள்ள முடியுமா?

அந்தப் பட்டியல் TGA இணையதளத்தில் ‘COVID-19 limits on dispensing and sales at pharmacies’, மற்றும்’Limits on dispensing and sales of prescription and over-the-counter medicines’ ஆகிய பக்கங்களில் உள்ளது. அது தொடர்ந்து விரிவாக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப் பட்டுள்ள முக்கியமான சில மருந்து வகைகளைக் கூற முடியுமா?

கட்டுப்பாட்டுக்கு  உட்படுத்தப்பட்டுள்ள சில மருந்து வகைகள்;

  • வயிற்றுப்போக்கைச் சரி செய்யப் பயன்படும் Imodium, gastrostop போன்ற மருந்துகள்
  • ஆஸ்த்துமா வியாதிக்குப் பயன்படும் மருந்துகள்
  • ஒவ்வாமைக்கு (allergy) உதவும் மருந்துகள்
  • இருமல், சளி போன்ற உபாதைகளுக்கு உதவும் மருந்துகள்
  • ஆஸ்பிரின், பாராசிடமால் போன்ற மருந்துகள்
இவை மட்டுமன்றி மருத்துவர் சீட்டுடன் பெறக்கூடிய பல மருந்துகள் இந்தக் கட்டுப்பாட்டில் அடங்கும். அவற்றை வாங்குவதற்கு மருத்துவர் சீட்டு தேவைப்படுவதால் அந்த வகையான மருந்துகளைக் கட்டுப்படுத்துவது சற்று சுலபம் என்று நினைக்கிறேன்.

கொரோனா தொற்றுக்கு சில தீர்வுகள் பரவலாக கூறப்படுகின்றனவே..!

ஆஸ்திரேலியாவில் சில கிருமி நாசினிகளும் பாரம்பரிய மருந்துகளும் கொரோனா தொற்றைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுவதாக விளம்பரங்கள் செய்யப்பட்டன.  அது போன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாமென்று TGA அறிவுறுத்தியுள்ளது. மேலும் அப்படி விளம்பரங்கள் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குளோரோகுயின் என்ற மருந்து கொரோனா தொற்றுக்கு உகந்த மருந்தாக பேசப்படுகிறதே...

குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மருந்துகள் மலேரியா, மூட்டு வீக்கம் போன்ற நோய்களுக்காகப் பதிவு செய்யப் பட்டுள்ள மருந்துகள்.  அந்த நோய்களுக்காக மட்டுமே இங்கே பயன்படுத்தவேண்டும் என்ற சட்டம் உள்ளது. இவை கொரோனா வைரசுக்குப் பயன்படுத்த TGA-வால் பரிந்துரைக்கப்படவில்லை. அப்படிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டுமென்று TGA அறிவுறுத்துகின்றது.  அதில் குளோரோகுயின் இப்போது ஆஸ்திரேலியாவில் விற்கப்படுவதில்லை என்று TGA இணையதளம் தெரிவிக்கிறது. 

சில மருந்துகள் ‘off-label use’ என்ற முறையில் TGA-வால் அனுமதி அளிக்கப்படாத  நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களால் அல்லது அவர்களின் சிபாரிசின் பேரில் பொது மருத்துவர்களால் பயன்படுத்தப்படலாம் என்ற ஒரு விதிவிலக்கு உள்ளது.  அந்த முறையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தைப் எந்தெந்தத் துறையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாட்டினை TGA வரையறுத்துள்ளது.

Doctor studies COVID-19
Source: Getty


மற்ற சிலநாடுகளில் கொரோனாவுக்கு குளோரோகுயின் பயன்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றனவே!

இந்த மருந்துகள் கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுமா என்ற ஆய்வுகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆய்வு முடிவுகள் சாதகமாக இருந்தால்தான் இவை பெருமளவில் உபயோகத்திற்கு வரும். சீனாவில் நடத்தப்பட்ட சிறிய ஆய்வு ஒன்றில் இந்த மருந்துகள் பயன் தருவதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.  அதை உறுதி செய்ய பெரிய அளவில் ஆய்வுகள் மேற்கொண்டு விடை தெரிய பல மாதங்களாகும். 

எனவே கொரோனாவுக்கு சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததாலும், அதற்குத் தடுப்பு மருந்து கிடைப்பதற்கு குறைந்தது ஓராண்டு காலம் ஆகும் என்பதாலும், கொரோனா முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு இந்த மருந்துகளைக் கொடுக்கலாம் என்று சில நாடுகள் முடிவெடுக்க வாய்ப்பு உண்டு.  அவர்களுடைய இறப்பைத் தவிர்த்துவிட முடியாதா என்ற எண்ணம் ஒரு காரணமாக இருக்கலாம்.

சாதாரண மருந்துகளை வாங்கி நாம் சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளதா?

பொதுமக்கள் பீதி அடையாமல் தங்களது உடனடித் தேவைக்கான அளவு மட்டும் மருந்துகளை வாங்கி வைத்துக்கொண்டால் அவசியமாக அந்த மருந்துகள் தேவைப்படும் அனைவருக்கும் அவை கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.  TGA தெரிவித்துள்ளது போல மருந்துகளுக்கு உண்மையான தட்டுப்பாடு இல்லை, நாம் உருவாக்கிய தட்டுப்பாடுதான் காரணம். எனவே சில வாரங்களில் தற்போதுள்ள சில தட்டுப்பாடுகள் நீங்கும் என்று நம்பலாம்.

மருந்துகளுக்கு உண்மையான தட்டுப்பாடு வரும் அறிகுறி தெரிந்தால், TGA அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த சிக்கலான நேரத்தில் நாம் அனைவரும் நமது பங்கைச் சரியாகச் செலுத்தினால் நலமுடன் வாழலாம்.

கட்டுரையாளர்:  அன்பு ஜெயா B.Pharm., MMedSc (UNSW), Scientific Affairs Director (Retd), Pfizer, Australia.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand