இந்தியாவில் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் நாடு திரும்பமுடியாமலுள்ளவர்களில் சுமார் முந்நூற்று எண்பது பேருடன் விசேட விமானமொன்று இன்றுகாலை ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தது. சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தோனேஷியா ஊடாக அடிலெய்ட் விமானநிலையத்தை வந்தடைந்த இந்த விமானத்திலுள்ளவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமையுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லயன் எயார் விசேட விமானத்தின் மூலம் வந்திறங்கிய அனைத்து பயணிகளும் விமானநிலையத்தில் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஹோட்டல்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, நோய்தொற்றுக்கு ஆளாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் அகப்பட்டிருக்கும் ஏனையவர்களையும் பகுதி பகுதியாக இவ்வாறு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் விமானசேவையொன்றுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்பிரகாரம் சேவை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
