கொரோனா தொற்றுக்காலத்தில் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு மருத்துவ ரீதியாக பாதுகாப்பு கிடையாது என்றும் அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாடுள்ள அரசாங்கம் தன்னை முகாமிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் தெரிவித்து அகதி ஒருவர் சார்பில் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் முக்கிய வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலடைந்துவரும் இந்தக்காலகட்டத்தில் - சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படுவதை நாட்டின் ஒவ்வொருத்தருக்கும் அரசாங்கம் அறிவித்துவருகின்ற இந்நிலையில் - ஆஸ்திரேலியாவிலுன்ன அகதி முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பாதுகாப்பு மருத்துவ - சுகாதார ரீதியாக கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்று தெரிவித்தும் -
முகாம்களில் உள்ள அகதிகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு கூறவேண்டிய ஆஸ்திரேலிய அரசாங்கம் தனது கடமையிலிருந்து விலக முடியாது என்றும் தெரிவித்தும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலுள்ள ஆயிரத்து நானூறு அகதிகளின் விடுதலைக்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த அகதி சார்பில் வழக்கினைத் தாக்கல் செய்துள்ள Human Rights Law Centre தெரிவித்துள்ளது. இந்த வழக்கிற்கு ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனை பொறுப்புக்கூறுமாறு கோரியுள்ள Human Rights Law Centre -
வழக்குத் தொடர்ந்துள்ள அகதி குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. குறிப்பிட்ட அகதி 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்தார் என்றும் மருத்துவ ரீதியான பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார் என்றும் மாத்திரம் குறிப்பிட்டுள்ளது.
Share
