உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலடைந்து அனைத்து தரப்பினரையும் பீதிக்கும் பதற்றத்துக்கும் ஆளாக்கியுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இணையம் மற்றும் தொலைபேசிவழித் திருடர்கள் தங்கள் கைவரிசையை காண்பிக்கத்தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே இவ்வாறான திருட்டுப்பேர்வழிகள் இலகுவாக ஏமாற்றுவதற்கு கையாளும் வழிகளில் முதன்மையாக காணப்படுவது விமான டிக்கெட்டுக்கள் ரத்து செய்யப்படுவது தொடர்பானதாகும். ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக்களுக்கான பணத்தை மீளத்தருவதற்கு வங்கி கணக்கு மற்றும் கடனட்டை விபரங்களை கேட்டு தொலைபேசிகளில் அநாமதேய அழைப்புக்கள் வந்தால் அவை தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதுபோல, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பான விபரங்கள் என்ற பெயரில் வருகின்ற மின்னஞ்சல்கள் மற்றும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான மருந்துகள், மாஸ்கள் என்ற பெயரில் வருகின்ற விளம்பரங்கள், இணைப்புக்கள் எதையும் அழுத்தி உட்செல்லவேண்டாம் என்றும் இவற்றின் ஊடாக பயனாளர்களின் விபரங்களை உருவிக்கொள்வதற்கு பெருந்தொகையான இணையத்திருடர்கள் திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
