கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தினை மீள்நிலைப்படுத்தும் நோக்கில் சுமார் 65 லட்சம் ஆஸ்திரேலியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொறிஸள் அறிவித்துள்ளார்.
நாட்டின் பணப்புழக்கத்தை ஊக்குவிப்பதற்கான செலவினங்களை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் 480 கோடி டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்தப்பணக்கொடுப்பனவின்படி, சுமார் 36 லட்சம் ஓய்வூதியர்கள், 11 லட்சம் Youth Allowance மற்றும் Newstart கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டிருப்பவர்கள், 15 லட்சம் முன்னாள் படைத்துறை சார்ந்தவர்கள்,Farm Household Allowance மற்றும் Family Tax Benefit பெறுபவர்கள் இந்த 750 டொலர்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிமுதல் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.
ஒருதடவை மாத்திரம் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு இதுவென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரசு அறிவித்துள்ள coronavirus stimulus package மூலம் சுமார் 7 லட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் பயனடையவுள்ள அதேநேரம் apprentices-தொழில்பயில்பவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள், குறிப்பிட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழிலில் பேணுவதற்கு 50 வீத சம்பள உதவியை அரசாங்கம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் தொழிலாளர்களுக்கான அரைவாசி சம்பளப்பணத்தை - அரசாங்கம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த காசுக்கொடுப்பனவின் ஊடாக உள்நாட்டு செலவீனத்தை ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை 1.2 வீதத்தினால் அதிகரிக்கலாம் என்றும் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Share
