கொரோனா தொற்று காலப்பகுதியில் வேலையிழந்த மற்றும் நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்கள் தங்களது Superannuation நிதியில் 20 ஆயிரம் டொலர்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அண்மையில் அறிவித்திருந்த நிலையில், இதுவரை சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தகுதிநிலை அங்கீகரிக்கப்பட்டால் முதல் பத்தாயிரம் டொலர்களை ஏப்ரல்-ஜூலை காலப்பகுதியிலும் அடுத்த பத்தாயிரம் டொலர்களை ஜூலை 1-க்குப் பின்னரும் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை கொரோனா பேரிடர் காரணமாக தங்களது தொழிலை இழந்த வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக விசாவிலுள்ளவர்களும்- நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமது Superannuation பணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைப்பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் விடுத்துள்ள தகுதிகளை பூர்த்திசெய்தவர்கள் பத்தாயிரம் டொலர்கள் வரையான Superannuation பணத்தினை வரித்திணைக்களத்தின் ஊடாக இந்த நிதியாண்டில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைப்பெற்றுக்கொள்வதற்கான தகுதிகள் அரச இணையத்தில் பட்டியல்படுத்தப்பட்டிருக்கின்றன.
நிதியை பெற்றுக்கொள்வதற்கு சமர்ப்பிக்கவேண்ய ஆவணங்கள் உட்பட நிதியை பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் எந்தவகையிலான விசாவின் கீழ் வேலைசெய்தவர்களாக இருக்கவேண்டும் போன்ற விவரங்களும் இந்த இணைய இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
Share
