ஆஸ்திரேலியாவிலிருந்து(mainland) வருகின்ற முகாம் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் படிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதால் தமக்கு கொரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்மஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேசன் குடும்பம் தெரிவித்துள்ளது.
பிரியா-நடேசன் குடும்பத்தினரின் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில் அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கடைசி நேர வழக்கின் அடிப்படையில் தற்போது இக்குடும்பத்தவர்கள் நால்வரும் கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த முகாமின் பாதுகாப்புக்கென ஆஸ்திரேலியாவிலிருந்து(mainland) அதிகாரிகள் சென்றுவருகிறார்கள். ஆனால் இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்றும் சிலர் தம்மைச்சந்திக்கும்போது சமூக இடைவெளியைப் பேணுவதில்லை என்றும் பிரியா கூறியுள்ளார்.
இந்த அதிகாரிகள் ஆஸ்திரேலியாவில் தொற்றுக்குள்ளாகாதவர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? குழந்தைகளுடன் வாழ்கின்ற தங்களுக்கு இந்த அதிகாரிகளினால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தமக்கு தேவையான உதவிகளையும் முழுமையாக செய்து தருவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தாங்கள் அனைவரும் ஒரே கட்டிலில் தூங்குபவர்கள் என்றும் ஒருவருக்கு ஏதாவது உடல்நலக்குறைவென்றாலும் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் அச்சம் வெளியிட்டுள்ளார்.
பிரியா - நடேசன் குடும்பத்தினரின் இந்தச் சிக்கலை அவர்களது சார்பிலான சட்டத்தரணியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை சுகாதார துறையின் அறிவுறுத்தலுக்கமைய கொரோனா தொடர்பிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் அங்கு பின்பற்றப்படுவதாக ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Share
