கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டாம் என விடுக்கப்பட்ட அறிவுறுத்தலை மீறி, சுமார் 16 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியர்கள் அனைவரும் வெளிநாட்டுப்பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கடந்த மார்ச் 18ம் திகதி பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவுறுத்தியிருந்தார்.
அதன் பின்னர் மார்ச் 25ம் திகதி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான தடையும் நாட்டில் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி மார்ச் 19 முதல் 30 வரையான காலப்பகுதியில் சுமார் 16 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பயணத்தடை கொண்டுவரப்பட்ட மார்ச் 25ம் திகதிக்குப் பின்னர் 3800 ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.
தொண்டு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கென வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கும், ஏனைய சிலருக்கு மிக அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமும், கருணை அடிப்படையிலும் விதிவிலக்குகள் அளிக்கப்படுகின்றபோதிலும் ஏனைய ஆஸ்திரேலியர்களின் இப்பொறுப்பற்ற செயல் மிகுந்த விரக்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசின் அறிவுரையை மீறி வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் ஏனையவர்களையும் ஆபத்தில் தள்ளுகின்றனர் எனவும் பிரதமர் சாடினார்.
இதேவேளை வெளிநாடுகளிலிருந்து திரும்பிவருபவர்கள் அரச செலவில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு அரசின் அறிவுறுத்தல்களை மீறி பயணம் செய்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிவரும்போது அவர்களுக்கான தனிமைப்படுத்தல் செலவினை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே அறவிட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
Share
