ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது அதைப்போட்டுக்கொள்ள மறுப்பவர்களுக்கு சில அரச கொடுப்பனவுகள் கிடைக்காமல் போகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
Oxford பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்புமருந்து வெற்றியளிக்கும் வாய்ப்புள்ளதாக நம்பப்படும் அதேநேரம், அடுத்த வருட ஆரம்பத்தில் இது பயன்பாட்டுக்கு வரும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான AstraZeneca-உடன் இணைந்து Oxford பல்கலைக்கழகம் தயாரித்துவரும் இத்தடுப்பு மருந்தினைத் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமொன்று AstraZeneca நிறுவனத்திற்கும் ஆஸ்திரேலிய அரசுக்குமிடையில் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி தடுப்புமருந்து பரிசோதனை வெற்றியளிக்கும்பட்சத்தில், அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் அதை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
மேலும் இத்தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படலாம் என முன்னதாகத் தெரிவித்த அவர், குறித்த தடுப்பூசியைப் போடுவது கட்டாயமாக்கப்படாது என பின்னர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள "no jab, no pay" என்ற அரச கொள்கையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களுக்கு சில அரச கொடுப்பனவுகளைப் பெறமுடியாத நிலை ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்தார்.
"No jab, no pay" கொள்கை காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஏனைய பல நோய்களுக்கெதிரான தடுப்பூசி போடப்படும் வீதம் அதிகரித்திருந்ததாக அமைச்சர் Greg Hunt சுட்டிக்காட்டினார்.
தற்போதைய "no jab, no pay" நடைமுறையின்படி Family Tax Benefit A , Child Care Subsidy போன்ற அரச சலுகைகளைப் பெறுவதற்கு பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு நோய்த்தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
இதேபோன்றதொரு நடைமுறை கொரோனா தடுப்பூசி தொடர்பிலும் பின்பற்றப்படலாம் எனவும் இதுகுறித்த இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளதாகவும் அமைச்சர் Greg Hunt தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 95 வீதமான மக்களுக்கு(மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதநிலையிலுள்ளவர்கள் 5 வீதமானோர் என கணிப்பிடப்படுகிறது) கொரோனா தடுப்புமருந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை முழு உலகமே கொரோனா தடுப்பூசியை எதிர்பார்த்துள்ள பின்னணியில், இதனைப் போட்டுக்கொள்வதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது(Anti-vaxxers) கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
