கொரோனா தடுப்பு மருந்து: எங்கே, எப்படி உருவாகிக்கொண்டுள்ளது? எப்போது கிடைக்கும்?

Three potential coronavirus vaccines at Novavax labs in Gaithersburg, Maryland in March, 2020.

Source: AAP

Vaccine எனப்படும் நோய்த் தடுப்பு மருந்து என்பது எதைக் குறிக்கிறது?

வாக்சின் என்று ஆங்கிலத்திலும் தடுப்பு மருந்து என்று தமிழிலும் அழைக்கப்படும் மருந்து என்பது நமது உடலைத் தாக்குகின்ற நோய்க் கிருமிகளுக்கு எதிராக வேலை செய்யக் கூடிய சக்தியை நம் உடலில் தூண்டும் மருந்துகள் என்று சொல்லலாம்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த தடுப்பு மருந்துகளில் எந்த நோய்க்கிருமிக்கு எதிராக இவற்றைப் பயன்படுத்தப்படுத்தப் போகிறோமோ அந்த நோய் கிருமியே பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அந்த நோய்க் கிருமிகளின் சக்தியை இழக்கச் செய்து, வீரியம் இல்லாத கிருமிகளாக அவற்றை மாற்றி தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்தை தயாரிக்க அந்த நோய்க்கிருமிகளையே பயன்படுத்தினாலும் அந்த நோய் கிருமிகள் செயல் இழக்க வைக்கப்பட்டதால் நோயை உண்டாக்கும் திறன் அவற்றுக்கு இருக்காது.

இந்த வகை மட்டுமின்றி, கொரோனா வைரசில் உள்ள புரதப்பொருளைப் பயன்படுத்தி தடுப்பு மருந்து தயாரித்தல், வைரசின் மரபணுவைப் பயன்படுத்தி தயாரித்தல் போன்ற வேறு பல புதிய முறைகளிலும் நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
التأثير الايجابي لوباء كورونا على جهود مكافحة الزهايمر والملاريا وتقنيات الكشف عن السرطان
التأثير الايجابي لوباء كورونا على جهود مكافحة الزهايمر والملاريا وتقنيات الكشف عن السرطان Source: AAP
நோய்க் கிருமிகளையே பயன்படுத்துவது மனிதர்களுக்கு எப்படி பாதுகாப்பானது என்று சொல்ல முடியும்?
முன்பு குறிப்பிட்டது போல, மருந்து தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் நோய் கிருமிகள் அவற்றின் நோய் உண்டாக்கும் தன்மை அழிக்கப்பட்டு, வீரியம் இல்லாதவையாக மாற்றப்பட்டவை. இந்த நோய்த் தடுப்பு மருந்துகள் பல கடினமான பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் மனிதர்கள் உபயோகத்துக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகின்றது.

தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

எல்லா மருந்துகளையும் போல தடுப்பூசி மருந்துகளாலும் பக்க விளைவுகள் ஏற்படலாம். தடுப்பு ஊசிகளால் ஊசி போட்ட இடத்தில் வீக்கம், வலி போன்றவை இருக்கலாம், சிலருக்கு லேசான காய்ச்சல் வரலாம்.

வேறு சில பக்க விளைவுகள் உண்டாகவும் வாய்ப்பு உண்டு. அதனால்தான், நோய்த்தடுப்பு ஊசி போட்ட பிறகு அங்கேயே சிறிது நேரம் இருக்கச் சொல்லி உங்கள் மருத்துவர் கூறுவார். அப்படி ஏதாவது எதிர் விளைவு ஏற்பட்டால் உடனே சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். பொதுவாக தடுப்பூசிகளினால் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படுவது மிகமிகக் குறைவு என்று சொல்லலாம். மேலும், அந்தக் கிருமியின் தொற்றால் வருகின்ற ஆபத்தை நோக்கும் போது, மருந்தினால் வரும் பக்க விளைவுகளை சமாளிக்க முடியும் என்று கூறலாம்.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி அல்லது வாக்சின் இன்றுவரை அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால் கோரோனா தடுப்பு மருந்தினால் எத்தகைய பக்க விளைவுகள் இருக்கும் என்று இபோதே கூற இயலாது.

Image

பொதுவாக நோய்த் தடுப்பு மருந்துகள் எப்படி வேலை செய்கின்றன?

நோய்த் தொற்று ஏற்படும்போது நோய்க் கிருமிகள் நமது உடலில் நுழைகின்றன. அதன்பின்னர், அவை எண்ணிக்கையில் பெருக ஆரம்பிக்கின்றன. ஆனால் நமது உடம்பில் இயற்கையாகவே இருக்கின்ற நோயை எதிர்க்கும் சக்தி உடலில் செலுத்தப்பட்ட அந்த நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கின்றன. இப்படி நோய்க் கிருமியை எதிர்த்துப் போராடும் போது, நமது உடல், புதிதாக நுழைந்த நோய்க் கிருமிக்கு எதிராக சில புரதப் பொருள்களை உற்பத்தி செய்கிறது. அதை ஆங்கிலத்தில் antibodies என்று கூறுவார்கள். அப்படி நமது உடல் உற்பத்தி செய்த புரதப் பொருள்கள் உள்ளே நுழைந்த நோய்க் கிருமிகளை அழிக்கின்றன. ஒருவேளை ஒருவரின் உடல் போதுமான அளவு அந்த புரதப் பொருள்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் அவர் அந்த நோயினால் குறைந்த அளவு பாதிக்கப்படுகிறார்.
அப்படியே அவர் முதலில் பாதிக்கப்பட்டாலும், அல்லது முதல் முறை தோல்வி கண்டாலும், அடுத்த முறை அதே நோய்க் கிருமி நம் உடலில் நுழையும்போது அதை எதிர்க்கக் கூடிய புரதப்பொருள் முன்பே நம் இரத்தத்தில் மிதந்து கொண்டு இருப்பதால் அவை புதிதாக வந்த கிருமியைப் பெருக விடாமல் ஆரம்பத்திலேயே அழித்து விடுகின்றன. அதனால் நமக்கு அந்த நோய் வருவதில்லை.
வீரியமற்ற கிருமிகளைக் கொண்ட தடுப்பு மருந்து நம் உடலில் செல்லும்போதும், நம் உடல் அதை கிருமியாகவே கருதி, அதற்கு எதிராக வேலை செய்து, நோய் எதிர்ப்புக்கான புரதப் பொருளை உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த நோய் எதிர்ப்புத் தன்மையே immunity என்று கூறப்படுகிறது.

தடுப்பு ஊசிகள் பாதுகாப்பானவை என்று எப்படி உறுதிப்படுத்துகிறார்கள்?

புதிதாக ஒரு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் அதன் தாக்கத்தை அறிந்து கொள்வதற்குப் பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அவற்றை இரண்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் விவரிக்கலாம். 

ஒன்று, pre-clinical testing என்று கூறுவார்கள். இதில் அந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு சோதனை முறையில் கொடுத்து பார்ப்பதற்கு முன்னால் நடத்தப்படும் பல பரிசோதனைகள் அடங்கும். மற்ற விலங்கினங்களுக்கு அந்த தடுப்பு மருந்தைக் கொடுத்து அது விளைவிக்கும் மாறுதல்களைச் சோதிப்பதும் இதில் அடங்கும். உதாரணமாக, புதிய மருந்தில் ஏதாவது நச்சுச் தன்மை உள்ளதா, குறிப்பிட்ட கிருமிகளை எதிர்த்து வேலை செய்கிறதா, என்பது போன்றவற்றை அறிந்துகொள்ள இந்த பரிசோதனைகள் உதவும்.
இரண்டாவது, clinical testing அல்லது clinical trial என்று கூறுவார்கள். புதிய தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு சோதனை முறையில் செலுத்தி, pre-clinical testing-ல் கிடைத்த அதே பயன்களை அல்லது விளைவுளை அந்த மருந்து மனிதர்களுக்கும் அளிக்கிறதா என்பதை உறுதி செய்யும் முறையாகும்.

இப்படி மனிதர்களுக்குக் கொடுத்து சோதிப்பது ஆபத்தானது இல்லையா?

மனிதர்களுக்கு பயன்படுத்துவதற்கு முன், அந்த தடுப்பு மருந்து விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது முதல் பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், நாம் நினைக்கும் அளவுக்கு ஆபத்து அதிகம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
அது மட்டுமல்ல, மனிதர்களுக்கு புதிய தடுப்பு மருந்தை சோதனை முறையில் பயன்படுத்துவதற்கு முன்னர், அந்த மருந்தை அந்தந்த நாட்டில் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் தந்து, அந்த மருந்தால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும். இதற்காக அந்த மருந்தின் பாதுகாப்பு பற்றிய முழு ஆவணங்களையும் மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்து அந்த நிறுவனத்திடமிருந்து அனுமதி பெறவேண்டும்.

Image

Clinical trial-ல் ஆரம்பத்திலேயே அந்த தடுப்பு மருந்தை ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொடுத்து சோதிப்பார்களா?

இல்லை. பொதுவாக, clinical trial என்பது நான்கு படிநிலைகளில் செய்யப்படும். Phase I, II, III, IV என்று கூறுவார்கள்.

Phase I-ல் நோயின்றி திடகாத்திரமாக உள்ள மனிதர்களில் சிலருக்கு மட்டும் (சுமார் 50, 60 பேர் என்று வைத்துக்கொள்ளலாம்) கொடுத்து அந்த தடுப்பு மருந்தின் விளைவுகளை சோதிப்பார்கள். நோயைக் குணப்படுத்துவதற்கு ஒருவருக்கு எவ்வளவு மருந்து தேவைப்படலாம் என்று தேவையான மருந்தின் அளவையும் (dose) நிர்ணயிப்பார்கள். இந்தப் படிநிலையில், முக்கியமாக மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள். ஆபத்து இருப்பதாகத் தெரியவந்தால் அந்த தடுப்பு மருந்தை மேற்கொண்டு சோதிப்பதை நிறுத்திவிடுவார்கள். பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அடுத்தப் படிநிலைக்குச் செல்வார்கள்.

Phase II-ல் கொஞ்சம் அதிகமான மனிதர்களுக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்து அந்த நோய்க்கு பலன் அளிக்கிறதா, நோய் வராமல் தடுப்பதில் பலன் அளிக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள்.
Phase III-ல் குறைந்தது 3000 பேருக்காவது இந்த தடுப்பு மருந்தைக் கொடுத்து பரிசோதனையை மேற்கொள்ளுவார்கள். சில சமயம் ஒரே மருந்துக்கு பல நாடுகளிலும் அந்த சோதனையை மேற்கொள்வதும் உண்டு. இதில் வெற்றிகரமான விளைவுகள் கிடைத்தால், அந்த தடுப்பு மருந்தினை விற்பனை செய்வதற்கு அனுமதி கோரி மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பார்கள்.
Phase IV-ல் – தடுப்பு மருந்து விற்பனைக்கு வந்தபின் அதன் விளைவுகளை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

Image

நோய் தீர்க்கும் மருந்தின் சோதனைக்கும் தடுப்பு மருந்தின் சோதனைக்கும் வேறுபாடு உண்டா?

ஆம். மற்ற மருந்துகளுக்கான பரிசோதனைக்கும் தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஒன்று உண்டு. மற்ற மருந்துகளை அந்த நோயுள்ள மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்வார்கள். நோய் குணமானால் அந்த மருந்தை விற்பனை செய்ய இயலும்.
ஆனால், தடுப்பு மருந்துகளை நோய் இல்லாதவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் உடலில் அந்த நோயை உண்டாக்க முயற்சி செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது அந்த மருந்து நோய் வராமல் தடுக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். அப்படி மனிதர்களுக்கு நோயை உண்டாக்குவது தருமத்துக்குப் புறம்பான (unethical) செயல் என்பதால் அதற்கு சில கடுமையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதுபோன்ற பரிசோதனை முறை முன்பு காலரா போன்ற வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒரு வித்தியாசம் என்னவென்றால் அப்போதெல்லாம் காலரா போன்ற வியாதிகளை குணப்படுத்த மருந்துகள் இருந்தன. ஆனால், இன்றைய சூழ்நிலையில் கொரோனாவைக் குணப்படுத்துவதற்கும் எந்த மருந்தும் இல்லை. தடுக்கவும் மருந்தில்லை. கொரோனா பாதிப்பைக் குணப்படுத்தத்தான் மருந்துகள் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
கொரோனாவின் பாதிப்பு உலக அளவில் பூதாகரமாக உருவெடுத்துள்ளதால் இந்த தடுப்பு மருந்து சோதனைகளை முன்னெடுக்க உலக சுகாதார நிறுவனம் Key criteria for the ethical acceptability of COVID-19 human challenge studies என்ற வரைமுறையை இந்த ஆண்டு மே 6ம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படிதான் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதனைக்குப் பயன்படுத்த முடியும்.
கொரோனா நோய்த்தடுப்பு மருந்துளுக்கான தேடல் இப்போது எந்த நிலையில் உள்ளது?
உலகம் முழுவதும் தற்போது ஏறத்தாழ 140 விதமான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

Image

முக்கியமான சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் CSIRO நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்து, அதைப் பரிசோதிப்பதிலும், உற்பத்தி செய்யும் முறைகளை உருவாக்குவதற்கும் முயற்சி செய்து வருகிறது.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகமும் காமன்வெல்த் சீரம் சோதனைக் கூடமும் (Laboratory) இணைந்து PittCoVacc என்ற தடுப்பு மருந்தை மனிதரின் தோல்மீது ஒட்டும்படியான patch வடிவில் உருவாக்கி வருகிறது.

மெல்பர்ன் நகரில் உள்ள Nucleus Network என்ற நிறுவனம் அமெரிக்காவிலுள்ள Novavax என்ற நிறுவனத்துடன் தன் ஆய்வைத் தொடங்கி மனிதர்களிடம் முதல்நிலை பரிசோதனையை ஆரம்பிக்கத் தொடங்கி உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் அவர்களுடைய மருந்து தயாராகும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

பிரிட்டன்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஜென்னர் நிறுவனமும் Astra Zenica என்ற மருந்து உற்பத்தி நிறுவனமும் இணைந்து மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி கொடுத்து முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளைச் செய்து வருகிறார்கள். இந்த சோதனை வெற்றி பெற்றால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளார்கள். சோதனை வெற்றி அடைந்தால் Astra Zenica நிறுவனம் 2 பில்லியன் dose மருந்து தயாரிக்கக் கூடிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா
Moderna என்ற அமெரிக்க biotechnology நிறுவனம் ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடித்து பரிசோதனை செய்தது. அதில் 8 மனிதர்களுக்கு மட்டுமே அந்த மருந்து கொடுத்துப் பார்த்ததில் பலன் இருப்பதாகக் கண்டறிந்தது. இப்போது பெரிய அளவில் சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளது. அடுத்த ஆண்டுதான் அவர்களுடைய தடுப்பு மருந்து தயாராகும் என்று கூறப்படுகிறது.

இந்தியா
இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் என்ற நிறுவனம் Covaxin என்ற தடுப்பு மருந்தை பூனாவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ளது.
COVID-19 vaccine
Source: ABC Australia
இந்த தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்த சோதனைகளை நடத்த இந்தியாவில் 12 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், இந்த தடுப்பு மருந்து ஆகஸ்டு மாதம் 15ம் தேதி, அதாவது இந்திய சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட வேண்டுமென்று ஒரு கட்டளையை அவசரமாகப் பிறப்பித்துள்ளது. Clinical trial என்பது 5, 6 வாரங்களில் நடத்தி முடிக்கக்கூடிய செயல் இல்லை, இது அரசியல் அழுத்தத்தின் காரணமாக செய்யப்பட்ட அறிவிப்பு என்று இந்தத் துறையில் உள்ள வல்லுனர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தபின், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தன் அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்த தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் Zydus Cadila என்ற நிறுவனம் ZyCov-D என்று தடுப்பூசி மருந்தை மனிதர்களிம் சோதிப்பதற்கான அனுமதி பெற்றுள்ளது. அந்த மருந்தை இம்மாதம் 1000 பேரிடம் சோதனை செய்யவும் முயற்சிகள் எடுத்துள்ளது.

அதேபோல Sanofi, GSK நிறுவனங்கள் ஒன்றிணைந்து தடுப்பு மருந்து தயாரிக்க முயற்சி எடுத்துள்ளனர்.
சீனா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன.
Phase III-ல் வெற்றிகரமான முடிவைக் கொடுக்கும் தடுப்பு மருந்துகளுக்கு, அந்த நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனங்களிடம் தங்கள் மருந்தை அந்த நாட்டில் விற்பனை செய்வதற்கான அனுமதியைப் பெற வேண்டும். எனவே, இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து நமது பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று நம்பலாம்.

கட்டுரையாளர்:
அன்பு ஜெயா B.Pharm., MMedSc (UNSW), Scientific Affairs Director (Retd), Pfizer, Australia.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand