கொரோனா வைரஸ் தொற்று சீனாவை மட்டுமின்றி முழு உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இந்த வைரஸ் குறித்து பல செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் WhatsApp, Facebook, Twitter, YouTube உள்ளிட்ட சமூகவலைத்தளங்களிலேயே இவ்வாறான செய்திகள் பரப்பப்படுகின்றன.
இதுவரை 170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள அதேநேரம் எட்டாயிரம் பேர்வரை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
இந்தப்பின்னணியில் கொரோனா வைரஸ் தொடர்பில் பரப்பப்படும் சில போலியான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் Fortune cookies மற்றும் wagyu beef போன்ற சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் கொரோனா வைரஸ் கலந்திருக்கலாம் என்ற செய்தி கடந்தவாரம் பரவலாக பகிரப்பட்டது. எனினும் இத்தகவல் எந்தவித ஆதாரமுமற்றது என மெல்பேர்ன் பல்கலைக்கழக infectious diseases epidemiologist James McCaw தெரிவித்துள்ளார்.
2. கொரோனா வைரஸை உருவாக்கியவர் பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ் என்ற தகவலும் அண்மையில் வெளியானது. எனினும் இச்செய்தியும் தவறென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனை சமூகவலைத்தளங்களில் பகிரும்போது இது போலியான செய்தி என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.
3. முதன்முதலில் கொரோனா வைரஸ் எப்படிப் பரவியது என்பதைக் கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கொரோனா வைரஸ் ஒரு bio weapon எனவும் இதனை அமெரிக்காதான் திட்டமிட்டு பரப்பியது என்றும் பரவலாக பேசப்படுகிறது. அதேபோன்று சனத்தொகையை குறைப்பதற்கு சீன அரசு மேற்கொண்டுள்ள இரகசிய நடவடிக்கை இதுவெனவும் பேசப்படுகிறது. ஆனால் இவையனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகும். Ebola வைரஸ் தாக்கத்தின்போதும் இப்படியான செய்திகள் உலாவந்திருந்தன.
4. கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு மக்கள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலே போதும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. அத்துடன் bleach-ஐ அருந்தினால் இந்நோய்த்தொற்றிலிருந்து விடுபடலாம் என்ற மிக ஆபத்தான செய்தியும் பரவிவருகிறது. ஆனால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த கூற்று முற்றிலும் தவறானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உப்பு நீரில் வாயை கொப்பளிப்பதோ அல்லது bleach-ஐ குடிப்பதோ இந்த நோயிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்பதற்கு உறுதியான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படியாகவெளியாகும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நம்பகத்தன்மைவாய்ந்த ஊடகங்களிடமிருந்து செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் அதேநேரம் இந்நோய்த்தொற்று குறித்த சரியான தகவல்களை ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சு இணையத்தளத்தில் பார்வையிடமுடியும்.
Share
