Coronavirus நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், சீனாவுக்கு பயணம் செய்ய விரும்பும் ஆஸ்திரேலியர்கள் தமது பயணத்திட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
இதேவேளை மெல்பேர்னின் பிரபலமான Alfred வைத்தியசாலையில் சந்தேகத்துக்குரிய coronavirus அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளை மருத்துவர்கள் சோதனை செய்துவருவதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி The Age தனது பிரத்தியேக செய்தியில் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட தொடர் வைர்ஸ் காய்ச்சலுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை செய்துவருவதாகவும் - ஏனைய நோயாளிகளுக்கு தொற்று ஏற்படாதவண்ணம் உயர்பாதுகாப்பு நிலையில் வைத்து இந்த சந்தேகத்துக்கிடமான நோயாளிகள் பராமரிக்கப்படுகிறார்கள் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விக்டோரியாவில் இதுவரைக்கும் coronavirus தொற்று ஒருவருக்கு மாத்திரமே உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் 11 பேர் சந்தேகத்துக்கிடமான நிலையில் உள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க சீனாவின் Wuhan பகுதிக்கு அண்மையில் சென்றுவந்தவர்களுக்கு காய்ச்சல் மற்றும் வேறு நோய் அறிகுறியிருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Coronavirus தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 106 பேர் பலியாகியுள்ள அதேநேரம் உலகம் முழுவதும் சுமார் 4000 பேர் இந்நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
