Coronavirus தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் Wuhan பிரதேசத்தில் சிக்குண்டுள்ள ஆஸ்திரேலியர்கள் அனைவரையும் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசென்று, அங்கு தனிப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அறிவித்துள்ள நிலையில், கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கபட்டுள்ள பிரியா - நடேஸ் குடும்பத்தை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருமாறு அவர்களது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Coronavirus பரவாமல் தடுப்பதற்கு பெருந்தொகுதியான மக்களை நாட்டிலிருந்து வெகுதூரத்திற்கு கொண்டு சென்று அவர்களை சோதனை செய்வதற்கு அரசாங்கம் முடிவுசெய்துள்ள நிலையில், இரண்டு சிறுமிகளையும் அவர்களது பெற்றோரையும் அதே இடத்தில் வைத்திருப்பது எந்த வகையில் பாதுகாப்பானது என்று கேள்வி எழுப்பியுள்ள பிரியா - நடேஸ் குடும்பத்தின் சட்டத்தரணி கரீனா, பிரதமரின் அறிவிப்பை கேட்டவுடன் தான் அதிர்ச்சியடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
Wuhan பிரதேசத்திலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்கு எவரும் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக பிரியா - நடேசஸ் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று கரீனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஆஸ்திரேலிய அரசு தரப்போடு பேசுவதற்கு தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டபோதும் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Share
