Grand Princess Cruise என்ற உல்லாசக் கப்பலில் பயணித்த ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி மரணித்ததைத் தொடர்ந்து, அதில் பயணித்த நான்கு ஆஸ்திரேலியர்களுக்கு COVID-19 தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகின்றமை நாமறிந்தசெய்தி.
இது போன்ற செய்திகள் அதிகரித்து வருவதால், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு முனைகிறது.
1908 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த உயிரியல் பாதுகாப்புகள் குறித்த quarantine act நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டில் நடைமுறையில் இருந்தது. பின்னர் 2015-இல் மாற்றியமைக்கப்பட்ட இச்சட்டம், மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பெரும் அதிகாரங்களை அரசுக்கு வழங்கியது.

In this photo,a cruise ship worker cleans a railing on the Grand Princess Thursday, March 5, 2020, off the California coast. Source: Michele Smith
இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலிய சமூகத்தினரிடையே கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, அந்த சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் சட்டமா அதிபர் - Attorney-General Christian Porter.
கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு, குணமடையும் வரையில் தடுத்து வைக்கப்பட சட்டத்தில் இடமுண்டு. விளையாட்டு நிகழ்வுகள், மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்ச்சிகள் நிறுத்தப் படலாம். இது குறித்த உத்தரவுகளை மீறுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடமிருக்கிறது. இந்த சட்டத்திலுள்ள சில கூறுகள் Diamond Princess உல்லாசக் கப்பலில் பயணித்த சிலரை தனிமைப்படுத்த உதவியது.
இதேவேளை, கொரோனா வைரஸ் அதிகமாகப் பாதிக்காத ஆப்பிரிக்கக் கண்டத்தில் எபோலா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் இன்றும் முயற்சித்து வருகின்றனர். அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்று கருதப்படுபவர்களை 21 நாட்கள் தனிமைப் படுத்தவேண்டிய தேவை இருக்கிறது. அப்படியான மையங்களில் தொற்று ஏற்பட்டிருப்பவர்களை வைத்திருந்ததன் மூலம், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தாம் கண்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் Congo நாட்டு சுகாதார அமைச்சு ஆகியன கூறுகின்றன.
இந்த மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை விட்டு வீடு திரும்பிய பின்னர், அது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதன் மூலம் எபோலா வைரஸ் குறித்துப் பரப்பப்படும் கட்டுக்கதைகளில் உண்மை இல்லை என்பதை மக்கள் உணர முடிகிறது. இதில் கற்றவற்றை கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுக்கும் பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு நம்புகிறது.

A health worker wears protective clothing outside an isolation ward to diagnose and treat suspected Ebola patients, at Bikoro Hospital. Source: AAP
இதுஒருபுறமிருக்க நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய மத்திய வங்கி எச்சரிக்கிறது.
அதேநேரம் கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு நம் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை அரை சதவீதத்தால் குறைத்துள்ளது என்று மத்திய கருவூலம் (Treasury) கணித்துள்ளது – சுற்றுலாத் துறை மற்றும் கல்வித் துறைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீ ஏற்படுத்திய தாக்கத்தை விட, இது இரண்டு மடங்கு அதிகமாகும், இவை இரண்டிலிருந்தும் நாட்டின் மொத்த இழப்பு குறைந்தது 0.7 சதவீதம் என்று கணிக்கப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் COVID-19 வைரஸினால் பாதிக்கப்படக்கூடும் என்றும், இதனால் உலகப் பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர் சரிவு ஏற்படும் என்றும் ஆலோசனை நிறுவனமான Price Waterhouse Coopers (PWC) சொல்கிறது.
2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பரவிய SARS வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட, COVID-19 வைரஸ் ஏற்படுத்தப் போகும் தாக்கம் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. SARS வைரஸ் ஆசிய பிராந்தியத்தை மட்டுமே அதிகமாகப் பாதித்தது.

The 2003 Sars outbreak. Source: Supplied
ஆனால், கொரோனா வைரஸ் உலகளாவிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்று மத்திய வங்கியின் துணை ஆளுநர் Guy Debelle கூறுகிறார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு முயற்சிக்கிறது. ஆஸ்திரேலிய பொருளாதாரத்தை ஆதரிக்க, தாம் அறிமுகப்படுத்தும் திட்டம் பெருமளாவில் உதவும் என்று தான் நம்புவதாக பிரதமர் Scott Morrison கூறினார்.எதிர்வரும் நாட்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அனைத்து நாடுகளையும் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தினாலும் குறிப்பாக மோசமான சுகாதார கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகள் குறித்துத்தான் கவலைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Ghebreyesus தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த வைரஸ் ஒரு இலட்சம் பேரை நேரடியாகப் பாதித்துள்ளது. அதில் 3,000ற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள்.

Tedros Adhanom Ghebreyesus, Director General of the World Health Organisation (WHO). Source: AAP
சுவிட்சர்லாந்திலும் பிரித்தானியாவிலும் இந்த வைரஸ் தொற்றினால் இறப்புகள் ஏற்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவிலும் தற்போது இந்த வைரஸ் தொற்றுடையவர் ஒருவர் இருக்கிறார் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு, சிட்னியிலுள்ள Epping Boys பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 11ஆம் ஆண்டு மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்தப் பாடசாலை, இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் இந்த COVID-19 வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக எச்சரித்துள்ள நமது அரசு, அங்குள்ள Daegu எந்ற இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறது. மேலும் பதினைந்து நாட்களுக்கு, தென் கொரியாவிலிருந்து வரும் வெளிநாட்டு குடிமக்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மறுக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
Share
