மெல்பேர்னில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அவரிடமிருந்து சிகிச்சைபெற்ற சுமார் 70 பேருக்கு நோய்அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவர் கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்காவிலிருந்து மெல்பேர்ன் திரும்பியதாக கூறப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸில் Epping பாடசாலை மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையடுத்து மூடப்பட்ட பாடசாலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு திறக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூ சவுத் வேல்ஸில் கொரோனா பரவல் அச்சப்படும்வகையில் காணப்படுவதாக மாநிலத்தின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்தில் ஈரானிலிருந்து வந்த இன்னொருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து, குயின்ஸ்லாந்தில் இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை பதினான்காவும், ஆஸ்திரேலியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 70 என்றும் உயர்ந்துள்ளது.(NSW: 34, Queensland: 14, Victoria: 11, South Australia: 7, Western Australia: 3, Tasmania: 1, Northern Territory: 1)
இது இவ்வாறிருக்க - உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோய் கண்காணிப்பு நடுவகம் அறிவித்திருக்கிறது. நோயின் தாக்கம் மேலும் பரவலடைவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னிய கரையில் தரித்துள்ள இன்னொரு உல்லாசக்கப்பலில் உள்ளவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அமெரிக்க சுகாதார வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவர்களில் 19 பேர் கப்பல் பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு உல்லாசக்கப்பலான டயமண்ட் பிறின்ஸஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இதேவேளை, இத்தாலியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை துரித கதியில் இருநூறைத் தொட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் மின்னல்வேகத்தில் அதிகரித்துவருகிறது. இதுவரைக்கும் மூவாரயிரத்து 858 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுஇவ்வாறிருக்க - வத்திக்கானில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் உறுதிப்படுத்தபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஸ்டார்பக்ஸ் கோப்பி நிறுவனம் தனது கடைகளில் ஒருவர் பயன்படுத்திய கோப்பி குவளையை இன்னொருவருக்கு உபயோகிக்க வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. தற்காலிகமாக தங்கள் கடைகள் அனைத்தும் மீள்பாவனை குவளைகளை தடைசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Share
