உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், 40-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களையும் தாக்கியுள்ளநிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்படும் சூழல் எழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் பல்வேறுவிதமான அத்தியாவசியப் பொருட்களை கடைகளில் முண்டியடித்துக்கொண்டு கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
ஆனால் இச்செயற்பாடு அநாவசியமான ஒன்று என்றும், மக்கள் பீதியடைந்து பொருட்களை அளவுக்கதிகமாக கொள்வனவு செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பீதியில், வீட்டிற்கு தேவையான அனைத்து உணவு, அத்தியாவசிய பொருட்கள், toilet paper, கை மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள் என்று பல நாட்களுக்கு தேவையானவற்றை பொதுமக்கள் வாங்கி குவித்துவருகின்றனர்.
குறிப்பாக toilet paper அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் வேகமாய் விற்றுத்தீர்வதால் பீதியடையும் மக்கள், இதைனைக் கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, ஒரு வீட்டிற்கு இத்தனைதான் கொடுக்க முடியும் என்ற நிபந்தனையுடன் பல்பொருள் அங்காடிகள் விற்பனையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
ஆனால் இப்படி அதிகளவில் பொருட்களை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறும், அனைத்துப்பொருட்களும் தேவையான கையிருப்பு உள்ளதாகவும், மக்கள் பீதியடையத்தேவையில்லை எனவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவுறுத்தியுள்ளார்.
அதேசமயம் Coles, Woolworths போன்ற மாபெரும் விற்பனை அங்காடிகளுடனும் அவர் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
Share
