கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்வகையில் சீனா மற்றும் ஈரானிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணத்தடையை மேலும் ஒருவாரத்திற்கு நீடித்துள்ள ஆஸ்திரேலியா, இப்பட்டியலில் புதிதாக தென்கொரியாவையும் இணைத்துள்ளது.
இதுதவிர இத்தாலியிலிருந்து வருவோருக்கான மேலதிக சிறப்பு பரிசோதனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு உண்டு.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கை என்றும், இப்பயணத்தடை எதிர்வரும் 14ம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் எனவும், அதன் பின்னர் இத்தீர்மானம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை உள்ளவர்கள் 14 நாட்களுக்கு தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐம்பதைக் கடந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் 80 நாடுகளுக்கு பரவியுள்ள அதேநேரம் 95 ஆயிரம் பேர் இந்நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை சுமார் 3250 பேரை இவ்வைரஸ் காவுகொண்டுள்ளது.
Share
