இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் கொழும்பிலிருந்து மெல்பேர்னுக்கான நேரடியான விமான சேவையை பயன்படுத்தினாலும் பெரும்பானலானவர்கள் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய வழிகளின் ஊடாக வருகின்ற விமானசேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தற்போது உலகளாவிய ரீதியில் பரவிவருகின்ற கொரோனோ வைரஸ் தொற்றுக்காலத்தில், மேற்படி விமானநிலையங்களில் எவ்வாறான சுகாதார ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன? பயணிகள் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பவை குறித்து கவனத்தில்கொள்ளவேண்டியுள்ளது.
கொழும்பு, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து விமான நிலையங்கள் சீனப்பயணிகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளபோதும் மேற்படி விமானநிலையங்களில் எல்லா பயணிகளிடமும் தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிங்கப்பூர் விமானநிலையத்தின் ஊடாக வருகின்ற அனைத்து பயணிகளும் கட்டாய உடல்வெப்பச்சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பயணிகள் அனைவரும் இதற்கு உடன்படவேண்டும் என்பது அந்நாட்டின் விமானநிலையத்தில் இறங்கி ஏறுகின்ற அனைத்து பயணிகளுக்குமான இறுக்கமான சட்டமாகும்.
மலேசியா விமான நிலையங்களில் வந்து இறங்கி ஏறுகின்ற பயணிகள் அவர்களது பயண விவரங்களை பதிவு அட்டையில் எழுதித்தர கேட்கப்படுகிறார்கள். சில வேளைகளில் பயணிகள் உடல்வெப்பச்சோதனைக்கு உள்ளாக்கப்படலாம். கொரோனா வைரஸ் தொற்று அவதானிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான இடங்கள் விமானநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து விமானநிலையங்களில் சகல பயணிகளும் உடல்வெப்பச்சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எவ்வளவு காலமாக பயணத்தில் உள்ளார்கள், எங்கு செல்கிறார்கள் போன்ற சகல விவரங்கள் பிரத்தியேகமாக பதிவுசெய்யப்படுகின்றன.
இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனியாக வருகின்ற முதியவர்கள் இந்த விவரங்களை முன்கூட்டியே அறிந்துவைத்துக்கொண்டால் நல்லது என்று பயண முகவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share
