கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து ஏன் இதுவரை இல்லை?

coronavirus

Source: Getty Images

WHO என்ற உலக சுகாதார நிறுவனத்தால் Public Health Emergency of International Concern என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் (Covid-19) தொற்று, கட்டுக்கடங்காமல் சர்வதேசரீதியாகப் பரவிவருகிறது.

இது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று WHO நம்புகின்றபோதும், இது எல்லாக் கண்டங்களுக்கும் பரவும் pandemic என்ற நிலையை எட்டக்கூடும் என்று ஆராய்சியாளர்களும், விஞ்ஞானிகளும் கருதுகிறார்கள். இதற்கான தடுப்புமருந்து ஒன்று ஏன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே எல்லோரது மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது.

Covid-19 (coronavirus) தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏனைய வைரஸ் தொற்றுகளுக்கு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பு மருந்துகளை இந்த வைரஸுக்கு எதிராகப் பரீட்சித்துப்பார்ப்பதிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேவேளையில் SARS CoV 2 என்ற கொரோனா வைரஸ்களுக்கான பிரத்தியேகமான தடுப்புமருந்துகளைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளோடு, Pharmaceutical நிறுவனங்களும் ஆய்வுகூடங்களும் பல்கலைக்கழகங்களும் ஈடுபட்டிருக்கின்றன. ஒரு வைரஸுக்கான தடுப்புமருந்தைக் கண்டுபிடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அது வருவதற்கு சுமார் 5வருடங்கள் எடுக்கும்.

Sars virus மற்றும் Ebola virus என்பவற்றுக்கான தடுப்புமருந்துகளைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த அனுபவம் காரணமாக, சுமார் ஒன்றரை வருடங்களில் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரமுடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சுமார் 20 க்கும் அதிகமான pharmaceutical நிறுவனங்கள், ஆய்வுகூடங்கள், பல்கலைக்கழகங்கள் என்பன கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன. இருந்தபோதும் இதைப்பொதுமக்கள் பயன்படுத்த இன்னும் ஒருவருடம் எடுக்கலாம்.

ஏன் அவ்வளவுகாலம் எடுக்கும்?
தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ்களில், பலவீனப்படுத்தப்பட்ட (weaker strain) - வைரஸ்களை உடலில் செலுத்துவதன் மூலமாக, உடலில் உள்ள நோயெதிர்ப்புச்சக்தி (immune system) புதிய எதிரியான வைரஸை அழிக்கும் ஆற்றலைப் பெறுகிறது. பின்னர், முழு வீரியமும் உள்ள இந்தவகை வைரஸ்கள் உடலில் புகுந்தால் அதை இனங்கண்டு அழிக்கும் வகையில் உடலின் immune system செயல்படுகிறது. இப்படித்தான் காலங்காலமாக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் இப்போது, வைரஸின் genetic code- மரபணுக்குறியீடு பகுத்தறியப்பட்டு, இந்த குறியீடு, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வைரஸ் ஒன்றினுள் புகுத்தப்படுகிறது. இது தடுப்பு மருந்தாக உடலில் ஏற்றப்படுகிறது. உடலின் நோயெதிர்ப்புச் சக்தி, இந்த genetic code ஐ நிர்மூலமாக்கும் ஆற்றலை உருவாக்கிக் கொள்கிறது.

தற்போதைய நிலையில், இந்தவிதமாகத் தடுப்பு மருந்தை உருவாக்கிக் கொள்ள மூன்று மாதங்கள் வரை எடுக்கும். குறிப்பிட்ட வைரஸை எதிர்ப்பதில் மனித உடலைப்போல செயல்படக்கூடிய, பிராணியைக் கண்டுபிடித்து அந்தப்பிராணியின் உடலிலேயே இந்த ஆய்வுகள் செய்யப்படும். அதன் பின்னர் clinical trials என்ற மனித உடலில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்று, முதலில் சில நபர்கள் மீதும் பின்னர் அதன் பெறுபேறுகளைப்பொறுத்து, சிறு குழுக்கள், பின்னர் சற்று பெரிய குழுக்கள் என்ற வகையில் இந்த clinical trials நடத்தப்பட்டு அதன் பெறுபேறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இதன்போது, விளைவுகள், பக்கவிளைவுகள் (side effects) என்பனவும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆகக்குறைவான, பாரதூரமற்ற பக்க விளைவுகள ஏற்படுத்தினாலும் தடுப்பு மருந்து நம்பகமாகச் செயல்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டபின்னர், அரச நிறுவனங்களான, Federal Drug Administration (U.S), Therapeutic Goods Administration (Australia) போன்ற, அந்தந்த நாடுகளின் அரச அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். இதை regulatory approval என்று சொல்வார்கள்.

இந்த மருந்தை மருந்துப் பொருள் தயாரிப்பாளர்கள் பெருமளவில் தயாரித்து, நியாயமான விலையில் மக்கள் வாங்குவதற்கோ அல்லது அரச நலத்துறை இலவசமாக விநியோகிப்பதற்கோ, மேலே கூறிய படிநிலைகளக் கடந்தே வரவேண்டும். இதனால், குறுகிய காலத்தில் தடுப்புமருந்துகள் சந்தைக்கு வரும் வாய்ப்பு இல்லை. மனிதருக்கு பாதுகாப்பானதா என்பது, நோயைக் குணப்படுத்துகிறதா என்பதைவிடப் பிரதானமானது என்ற அடிப்படையிலேயே மருந்துகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand