போதுமான கால அவகாசம் வழங்காமல், தங்களது தூதரகத்துடன் உத்தியோகபூர்வமாக எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளாது, சீனாவிலிருந்து வரும்- ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமையற்றவர்களை, நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா அரசு முடிவெடுத்திருப்பது குறித்து சீன தூதரகம் விசனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவினால் பாதிக்கப்பட்டுள்ள சீன மாணவர்கள் மற்றும் பலருக்கான நட்டஈட்டினை ஆஸ்திரேலியா வழங்கவேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலடைந்து ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்துவிட்டதை அடுத்து சீனாவிலிருந்து வருகின்ற ஆஸ்திரேலிய குடியுரிமை, நிரந்தர வதிவிட உரிமை மற்றும் ஆஸ்திரேலியாவில் குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை அறிவித்த ஆஸ்திரேலிய அரசு, அங்குள்ள ஆஸ்திரேலியர்களையும் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசென்று அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தி, மருத்துவ சோதனை மேற்கொண்ட பின்னரே, நாட்டுக்குள் அனுமதிப்பது என்று முடிவெடுத்திருந்தது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவினால் ஆஸ்திரேலியாவில் படித்துவிட்டு, விடுமுறைக்கு சீனாவுக்கு திரும்பிய பல மாணவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாமல் இடையில் சிக்கியுள்ளார்கள் என்றும் ஆஸ்திரேலியா திரும்பவேண்டிய வேறு பல சீனர்களும் இவ்வாறான சிக்கலில் மாட்டியுள்ளார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இது குறித்து ஆஸ்திரேலியாவிலுள்ள சீன தூதரகத்தின் உதவித்தலைவர் Wang Xining கூறும்போது - இப்படியானதொரு அவசர நிலையின்போது பதற்றம் ஏற்படுவது இயற்கைதான் ஆனால், அது குறித்து முடிவெடுக்கும்போது நியாயமானதாக இருக்கவேண்டும். ஆஸ்திரேலிய அரசு ஒருதலைப்பட்சமாக சீனர்களுக்கு கதவை மூடிக்கொள்வது விருப்பத்துக்குரிய விடயமில்லை - என்று தெரிவித்துள்ளார்.
Share
