மெல்பேர்ன் வடக்கில் அமைந்துள்ள குடிவரவுத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற இடைத்தங்கல் முகாமில்(Melbourne Immigration Transit Accommodation) தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர், கொரோனா தொற்றுக்குள்ளாகக்கூடிய வாய்ப்புக்களிருப்பதால் அவரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றுமாறு ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு ஆஸ்திரேலிய Federal Court உத்தரவிட்டுள்ளது.
கிட்டத்தட்ட பத்துவருடங்களாக ஆஸ்திரேலியாவில் தனது மகன் மற்றும் பேரக்குழந்தைகளோடு வசித்துவந்த குறிப்பிட்ட நபர், முன்பு வெளிநாட்டில் நடத்திய வர்த்தகம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்யப்பட்டு, ASIO பிரிவினரால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்று முடிவெடுக்கப்பட்டதன் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இடைத்தங்கல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு நோய்களை உடைய இந்த 68 வயதுடைய நபரை தடுப்புமுகாம் சூழலில் வைத்திருப்பது தொடர்ச்சியாக பரவிவருகின்ற கொரோனா தொற்றுக்காலப்பகுதியில் பாதுகாப்பானது அல்ல என்று இவர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் வழக்கறிஞர்கள் முன்வைத்த கருத்தினை ஏற்றுக்கொண்டு, நீதவான் இந்த மாற்றலை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபரை அங்கிருந்து வெளியேற்றி எங்கு தங்கவைப்பதென்ற இறுதி முடிவை அமைச்சர் பீட்டர் டட்டன் எடுக்கவுள்ளார்.
இதேவேளை குறித்த நபரை மீண்டும் சமூகத்தில் வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,ஆஸ்திரேலியாவிலுள்ள தடுப்புமுகாம்களில் தற்போதைய கொரோனா தொற்று பரவும் காலத்தில் போதிய பாதுகாப்பில்லை என்பதையே நீதிமன்றத்தின் உத்தரவானது உறுதிசெய்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
Share
