விக்டோரியாவில் அதிகரித்துவருகின்ற கொரோனாவிலிருந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை பாதுகாத்துக்கொள்ளும்பொருட்டு, மெல்பேர்னிலிருந்து வருபவர்களுக்கு தங்குமிட அனுமதி கொடுப்பதைத் தவிர்க்குமாறும், களியாட்ட விடுதிகள் மற்றும் மதுபானசாலைகள் ஆகிய இடங்களில் மெல்பேர்ன்வாசிகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும் NSW Premier Gladys Berejiklian அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை NSW மாநிலத்தவர்கள் மெல்பேர்னுக்கு செல்லவேண்டாம் என்றும் Gladys Berejiklian அறிவுறுத்தியுள்ளார்.
அடுத்தவாரத்துடன் ஆரம்பமாகவுள்ள பாடசாலை விடுறையில் அதிகளவானர்கள் மாநிலம்விட்டு மாநிலத்துக்கு பயணம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளிருப்பதால், இந்தப்பயணங்கள் தற்போது அதிகரித்துவருகின்ற கொரோனா தொற்றினை மேலும் விகாரமாக்கிவிடக்கூடும் என்று சுகாதாரத்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளதையடுத்து, NSW மாநில Premier இந்த கடும்போக்கை கடைப்பிடிக்கத்தொடங்கியுள்ளார்.
விக்டோரியாவில் கொரோனாவினால் நேற்றிரவு உயிரிழந்த நபரோடு மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை இருபதாகவும் தேசிய ரீதியில் 103 ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
