SKIP TO MAIN CONTENT

எல்லைக்கட்டுப்பாட்டை மீறி தெற்கு ஆஸ்திரேலியா சென்ற விக்டோரிய மாணவிகளால் பதட்டம்!

எல்லைக் கட்டுப்பாட்டை மீறி விக்டோரியாவிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த இரண்டு மாணவிகளால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ABC News: Alice Dempster
Source: ABC News: Alice Dempster

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

விக்டோரியாவிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த இரண்டு மாணவிகள் தங்களது தோழியோடு பாடசாலை பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது பொலீஸாரினால் இடைமறிக்கப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

கோவிட் பரவலடைந்துள்ள விக்டோரியாவிலிருந்து வந்த காரணத்தினால், இந்த இரண்டு மாணவிகளும் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நேற்றைய தினம் விக்டோரியாவிலிருந்து புறப்பட்டு, தெற்கு ஆஸ்திரேலியா போகும் வழியில் பல்வேறு வாகனங்களில் இந்த இரண்டு மாணவிகளும் பயணம் செய்து அடிலெய்டை அடைந்திருக்கிறார்கள்.

அங்கு தமது தோழியோடு சேர்ந்து பாடசாலை பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, விக்டோரிய பொலீஸார் கொடுத்த தகவலின்படி தெற்கு ஆஸ்திரேலிய பொலீஸாரினால் குறிப்பிட்ட பேருந்து மறிக்கப்பட்டு, இரண்டு மாணவிகளும் இறக்கப்பட்டுள்ளார்கள்.

தாம் அந்தப் பாடசாலையின் புதிய மாணவிகள் என பேருந்து ஓட்டுநரிடம் இம்மாணவிகள் கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முதல் காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட குறிப்பிட்ட மாணவிகள் இருவர் தொடர்பிலும் அவர்களது பெற்றோருக்கு தகவலை அறிவித்த பொலீஸார், இருவருக்கும் கோவிட் சோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த பேருந்திலிருந்த 36 பேரும் உடனடியாக அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் குறித்த மாணவிகள் தெற்கு ஆஸ்திரேலியாவை வந்தடைவதற்கு உதவிய ஏனைய ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது வாகனங்களில் இருந்தவர்களும் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு மாணவிகளும் விக்டோரியாவில் கோவிட் தொற்று அதிகமுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவரவில்லை.

இவர்கள் எதற்காக எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி தெற்கு ஆஸ்திரேலியா சென்றார்கள் என்பது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now