COVID 19 தொற்றுநோய்க்கான தடுப்புமருந்தின் விநியோகம் இங்கு ஆரம்பிக்கப்பட்டு, அரசின் இலக்கை எட்டும் நோக்கத்தோடு, தடுப்புமருந்தை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுவருகிறது.
தடுப்புமருந்து தயாரிப்பாளர்களிடமிருந்து, போதுமான தடுப்புமருந்தைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், விநியோகத்திற்கு வரும் தடுப்புமருந்து குப்பிகளுள்(vials ) 20 தொடக்கம் 30 சதவீதமானவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். இது உண்மைதானா?
ஆம். இதை vaccine wastage என்று சொல்கிறார்கள். சாதாரணமாக எல்லா தடுப்புமருந்துகளின் விநியோகத்தின் போதும் சுமார் 10/20 சதவீத சேதாரம்- wastage ஏற்படுவது புதிதல்ல. ஏனென்றால் குளிர்சாதனப்பெட்டி மற்றும் freezers என்ற உறைகுளிர் சாதனப்பெட்டிகளில் இவை வைத்திருக்கப்படவேண்டிய நிலையில் இவற்றை பயன்பாட்டுக்காக எடுக்கும்போதும், அறையின் வெப்பநிலையில் வைத்திருக்கும்போதும், தவிர்க்கமுடியாத காரணங்களால் இவற்றை உரிய நேரத்திற்குள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் போதும் அவற்றின் ஆற்றல், பாதுகாப்பு என்பன பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவற்றைப் பயன்படுத்தமுடியாது.
குறிப்பாக COVID 19 இற்கான தடுப்புமருந்துகளைப்பொறுத்த அளவில் அரசு இங்கு விநியோகித்துவரும் Pfizer மற்றும் Astrazeneca தடுப்புமருந்துகளை எடுத்துக்கொண்டால், சேதாரம் wastage இன்னும் அதிகமாகவே இருக்கின்றது. இதற்கு பிரதான காரணங்கள் பல இருக்கின்றன.

The prime minister said the government has no plans to set a new target, after initially aiming to have first doses completed by October. Source: AAP
இதனால் wastage என்ற சேதாரம் அல்லது கழிமானம் அதிகமாகவே ஏற்படுகிறது. ஆகவே பிரான்ஸ் போன்ற நாடுகள் 30 சதவீதமான சேதாரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கின்றன. Developing countries என்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குளிர்ச்சாதன மற்றும் கடும் உறைகுளிர் சாதனங்கள் போதுமான அளவில் இல்லாத நிலையில் இந்த சேதாரம், 50 சதவீதம் வரை இருக்குமென்று WHO உலக சுகாதார நிறுவனம் கணித்திருக்கிறது.

Source: AAP
தனித்தனி குப்பிகளில் அடைக்காமல் பல dose-களை ஒரே குப்பியில் அடைக்க என்ன காரணம்?
தடுப்புமருந்துகள் பொதுவாக பாதுகாப்பு, ஆற்றல் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தனித்தனி குப்பிகளில் அடைக்கப்படுவதே நல்லது. ஆனால் இப்போது நாம் எதிர்கொள்வது pandemic என்ற சர்வதேச எல்லகளைத் தாண்டிய கொள்ளை நோய். ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான dose கள் தேவைப்படுகின்றன.
ஒரே குப்பியில் பல dose களை நிரப்பும்போது உற்பத்தி வேகம், உற்பத்திச்செலவு, மற்றும் இடத்திற்கிடம் கொண்டுசெல்லுதல், பத்திரப்படுத்துதல் என்பவற்றுக்குத் தேவையான இடப்பரப்பின் தேவை என்பன குறைகின்றன. அத்தோடு இந்த தடுப்புமருந்துகளை கண்ணாடிக் குப்பிகளில் glass vials மட்டுமே நிரப்பவேண்டும் என்ற நிலையில், திடீரென்று எழுந்த அபரிமிதமான தேவைக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் glass vials சந்தையில் இல்லை. இவற்றுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. கோடிக்கணக்கான கண்ணாடிக் குப்பிகள் தேவைப்படும் நிலையில் ஒருகுப்பியில் பல dose களை, மருந்து தயாரிப்பவர்கள் நிரப்புகிறார்கள்.
Pfizer ஒரே குப்பியில் 5 தொடக்கம் 6 dose களையும் Astrazeneca 8 தொடக்கம் 10 dose களையும் நிரப்புகின்றன. சரியான உபகரணம் மற்றும் technique ஐப் பயன்படுத்தி சரியான முறையில் மருந்தை ஊசிகளில் ஏற்றிக்கொள்ளும் வைத்தியர்கள் அல்லது வைத்திய தாதிமார், Pfizer குப்பியிலுள்ள மருந்தை 6 பேருக்கும் Astrazeneca மருந்தை 10 பேருக்கும் கொடுக்கமுடியும். இதை முழுமையாக வைத்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளாததாலும் சேதாரம் அதிகரிக்க இடமுண்டு.

A nurse draws from a vial of Covid-19 vaccine at the Camp Hill Medical Centre n Brisbane on Monday, March 22, 2021. Source: AAP
உபகரணம் என்று சொல்லும்போது, Pfizer தடுப்புமருந்தைப் பொறுத்த அளவில் 0.3 ml மருந்தே ஒருவருக்கு ஏற்றப்படவேண்டும் என்ற நிலையில் low dead space syringes என்ற விசேட syringe கள் பயன்படுத்தப்படும்போது உச்ச பட்ச dose களைப் பெறமுடியும். இந்த வகை syringe கள் விசேடமாகப் பெறப்படவேண்டும்.

First Doses Of Oxford-AstraZeneca COVID-19 Coronavirus Vaccine Arrive In Australia. Source: Getty
நாம் இப்போது பயன்படுத்தும் Pfizer மற்றும் Astrazeneca தடுப்புமருந்துகளைப்பொறுத்த அளவில் எதில் சேதாரம் அதிகமாக இடம்பெற வாய்ப்பிருக்கிறது?
Pfizer தடுப்புமருந்து கடும் உறைகுளிர் நிலையில் -90/-60 C வைத்திருக்கப்படவேண்டும்; இடத்திற்கிடம் கொண்டு செல்லும்போதும் இந்த வெப்பநிலை உறுதி செய்யப்படவேண்டும்; பின்னர் அதை சாதாரண குளிர்ச்சாதனப்பெட்டியில் 3 மணித்தியாலங்கள் வைத்து திரவ நிலைக்கு thaw செய்யவேண்டும்; அதன்பின்பு அந்த மருந்துக்குப்பிக்குள் 1.8 ml saline திரவத்தை ஊசிமூலம் ஏற்றி (reconstitute) கலக்கவேண்டும்; அதன்பின்னரே அதிலிருந்து ஒரு நபருக்கு 0.3 ml மருந்தை ஊசிமூலம் ஏற்றவேண்டும். உறைகுளிர் நிலையிலிருந்து எடுக்கப்பட்டு திரவநிலைக்கு கொண்டுவரப்பட்ட மருந்தை மீண்டும் உறைகுளிர் நிலையில் வைக்கமுடியாது. ஆனால் திரவநிலையில் 5 நாள்வரை குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்திருக்கலாம். Saline கலக்கப்பட்ட மருந்தை 6 மணித்தியாலத்திற்குள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இத்தனை சிக்கல்கள் இருப்பதால் Pfizer தடுப்புமருந்தைப் பொறுத்த அளவில் சேதாரம் அதிகம் ஏற்பட இடமுண்டு.
AstraZeneca தடுப்பு மருந்தைப்பொறுத்த அளவில் அது சராசரி 5 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்திருக்கவேண்டும், வெளியில் எடுத்தால் vial ஒன்றைத் திறந்தபின், 6 மணித்தியாலங்களுக்குள் மீதி மருந்து பயன்படுத்தப்படவேண்டும் என்பதைத்தவிர வேறு சிக்கல்கள் இல்லை. ஆகவே இதில் சேதாரம் மிகக் குறைவு.
பொதுவாக wastage என்ற சேதாரத்தைக் குறைக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்ன?
சேதாரம் இரண்டு கட்டங்களில் ஏற்படுகின்றன. ஒன்று மருந்துக்குக் குப்பியை திறக்க முன் நிகழ்வது; அடுத்தது, திறந்தபின் நிகழ்வது. சர்வதேசரீதியாக அரசுகள் பல கோடிமக்களுக்கு துரிதமாக தடுப்புமருந்தை கொடுக்க முற்படும் நிலையில் wastage என்ற சேதாரம் தவிர்க்கமுடியாதது. ஆனால் COVID 19 இற்கான தடுப்புமருந்து விலையுயர்ந்தது மட்டுமல்ல கிடைத்தற்கரியதுமாகும். இதனால் அதை குறைந்த சேதாரத்துடன் அதிகம் பேருக்கு வழங்கவே அரசுகள் முனைந்திருக்கின்றன. விநியோகிக்கும் logistics என்ற விநியோக ஏற்பாட்டில் உள்ள குறைகளைக் களைவதன்மூலம் இதை அதிவேகமாகவும் பாதுகாப்பாகவும் விநியோகிக்கமுடியும். பத்திரப்படுத்தல் மற்றும் கையாளுதல்- storing and handling தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்களையும் தேவையான பயிற்சிகளையும் வழங்குவதில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
மருந்துக்குப்பிகள் வைத்தியர்களிடம் அல்லது vaccinating centre இற்கு வந்தபின்பு ஏற்படும் சேதாரங்கள் மிக அதிகம் என்று supply chains என்ற விநியோக சங்கிலி தொடர்பாக நிபுணத்துவம் பெற்றுள்ள John Moores University ஐச்சேர்ந்த டாக்டர் Sarah Schiffling கூறுகிறார்.

Source: AAP Image/David Cheskin
VOC- Vaccines Operations Centre என்ற நிலையம் wastage என்ற சேதாரம் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்துவருவதாகவும், கையிருப்பில் உள்ள doses இற்கு அமைவாக மருந்து ஏற்றிக்கொள்பவர்களின் எண்ணிக்கையைச் சமன் செய்வதில் மிகுந்த பிரயத்தனம் எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
தடுப்பு மருந்து ஏற்றிக்கொள்பவர்களைப்பொறுத்த அளவில், உலகில் உள்ள நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்?
மேலோட்டமாக பாரக்கும்போது நாம் மிக மிகப் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம். சுமார் எட்டரை லட்சம் பேருக்கு முதலாவது dose கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒப்பு நோக்கல் அடிப்படையில் பார்க்கும்போது, இன்றைய திகதியில் 0.6 சதவீத மானவர்களே இங்கு தடுப்பு மருந்து ஏற்றிக்கொண்டுள்ளார்கள். அமெரிக்காவில் 30 சதவீதம்; இந்தியா 5 சதவீதம்; பிரேஸில் 8 சதவீதம். பிரான்ஸ் 18 சதவீதம்.
ஆனால் உலக நாடுகள் பொறாமைப்படும் அளவுக்கு நாம் ஏறக்குறைய COVID free அதாவது COVID தொற்று இல்லாத நாடாகவே இப்போது பார்க்கப்படுகிறோம். இரண்டு பிரதானமான தடுப்பு மருந்துகள் எம்மிடம் இருக்கின்றன. நாம் மெதுவாகவே ஆரம்பித்தாலும், இலக்குகளை அடைவதில் தாமதம் இருந்தாலும், எதிர்வரும் வாரங்களில் விநியோகம் முடுக்கிவிடப்படும் என்பதில் சந்தேகமில்லை. எல்லவற்றுக்கும் மேலாக எமக்கு தேவைப்படும் தடுப்பு மருந்துகளுள் ஒன்று, இங்கேயே தயாரிக்கப்படுகிறது.

Source: SBS
விநியோகம் துரிதமாக நடக்கவில்லை என்ற விரக்தி இருந்தாலும், COVID 19 ஐக் கட்டுப்படுத்துவதில் நாம் பெற்ற வெற்றிகாரணமாக, நிதானமாக, பாதுகாப்பாக, வெற்றிகரமாக நாம் தடுப்புமருந்தை ஏற்றிக்கொள்ள நமக்கு போதுமான அவகாசம் இருக்கிறது என்றே பார்க்கவேண்டும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
