சிட்னி கிரிக்கெட் அரங்கில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பார்வையாளர் பக்கத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் மீது இனவெறி வசைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது விசாரணைகளின் முடிவில் உறுதிசெய்திருக்கிறது.
ஆனால், அந்தக்குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் கிரிக்கெட் வாரியம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களான Mohammed Siraj, Jasprit Bumrah ஆகியோர் மீது பார்வையாளர்கள் தரப்பிலிருந்து இனவெறி வசைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டதை பல்வேறு தரப்பினரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் தங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்றும் அந்தக்குற்றத்தை இழைத்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்கு மைதானத்துக்கு வந்தவர்களின் டிக்கெட் மற்றும் CCTV காட்சிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
விசாரணைகள் தொடர்பான பூர்வாங்க அறிக்கை தற்போது சர்வதேச கிரிக்கெட் சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அடையாளம் காணப்படும் குற்றவாளிகளுக்கு போட்டிகளைப் பார்ப்பதற்கான தடை விதிக்கப்படுவதுடன் இந்தவிடயம் நியூசவுத் வேல்ஸ் பொலீஸாரிடம் கையளிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
