கொரோனா சோதனை செய்யப்படுபவர்களிடம் அவர்களது கலாச்சார பின்னணி மற்றும் தாய்மொழி ஆகிய விவரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக தீவிராமாக ஆய்ந்துவருவதாக ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் எதிர்காலத்தில் தீவிரமடைவதற்கான வாய்ப்பு சாத்தியம் என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்த நடைமுறையை கைக்கொள்வது பற்றி சுகாதார அமைச்சு ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு சமூக பின்னணிகளை கொண்டவர்களின் மத்தியில் கொரோனா தொற்றின் தாக்கமும் அதன் பரவலும் வெவ்வேறாக அமைந்துள்ளதை கடந்த கால காரணிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆகவே, இதனடிப்படையில், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அத்தியாவசியம் என்றும் சுகாதார அமைச்சு கருதுகிறது.
கொரோனா சோதனை செய்யும்போது, பூர்வகுடி பின்னணி மற்றும் ஆணா - பெண்ணா போன்ற அடிப்படை தரவுகளை பெற்றுக்கொள்வதைப்போல கலாச்சார பின்னணி மற்றும் தாய்மொழி ஆகியவற்றை பெற்றுக்கொள்வதிலும் தவறில்லை. ஆனால், தனிநபர் சார்ந்த முக்கியமான இந்த விடயங்களை சமூகங்களின் மீதான மதிப்பிற்கு பங்கம் ஏற்படாதவண்ணம் பெற்றுகொள்வதும் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது என்று புத்திஜீவிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
